தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஏற்க மறுத்த மைத்திரி

Report Print Ajith Ajith in இலங்கை
208Shares

அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன தமக்கு 2019 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 21ம் திகதி வரை 15 தடவைகள் தொலைபேசியில் உரையாடியதாக பதிவுகள் உள்ளபோதும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குல் தொடர்பில் வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கை குறித்து தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நேற்று இடம்பெற்றபோது மைத்திரி பால சிறிசேன இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் தாம் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது நிலந்த ஜெயவர்த்தனவின் தொலைபேசி அழைப்புகள் தமக்கு மேற்கொள்ளப்பட்டதாக தரவுகள் காட்டப்படுகின்றபோதும் தாம் அவருடன் பேசும் நிலையில் இருக்கவில்லை என்று மைத்திரி பால குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிங்கப்பூரில் தாம் இருந்த நிலை குறித்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன நேற்று ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தகவல் வெளியிட மறுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிற்று தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன், கொழும்பு பேராயரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியின் ஆலோசகர் பி.சி.ஷாமில் பெரேரா நேற்று மைத்திரி பாலவை குறுக்கு விசாரணை செய்தார்.

ஏதேனும் முக்கியமான தேசிய பாதுகாப்பு தகவல்கள் இருந்தால், நேரடியாக தமக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரச புலனாய்வின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவுக்கு சாட்சியான மைத்திரி பால சிறிசேன அறிவுறுத்தியிருந்தாரா என்று இதன்போது சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிறிசேன தாம் தேசிய பாதுகாப்பு பேரவையில் வைத்து தாம் நிலந்த ஜெயவர்தனவுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உயிர்த்த ஞாயிற்று தாக்குதல் நடக்கும் வரை இந்த துரதிர்ஷ்டத்தை யாரும் தமக்கு தெரிவிக்கவில்லை என்று மைத்திரி தெரிவித்துள்ளார்.

நிலந்த ஜெயவர்தனவை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முறை இருந்ததா? என்று இதன்போது சட்டத்தரணி மைத்திரியிடம் கேட்டார்.

அதற்கு அவர் இல்லை, அவருடன் இதுபோன்ற தினசரி தொலைபேசி அழைப்புகள் எதுவும் வரவில்லை என்று பதிலளித்துள்ளார்.

சாட்சியின் கூற்றுக்கள் இவ்வாறு இருக்கின்றபோதும் 2019 ஜனவரி 01 முதல் 2019 ஏப்ரல் 31 வரை நிலந்த ஜெயவர்தனவுக்கும் சாட்சிக்கும் இடையில்; 221 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன என்று சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, பதிவுகள் இதைக் காட்டினாலும், அவரை பலமுறை அழைத்தது தமக்கு நினைவில் இல்லை. நிலந்த¸ தமது இல்லக்கத்தை பல முறை அழைத்தாரா என்று தமக்கு தெரியவில்லை. பல அழைப்புகளுக்கு பதிலளிக்க தமக்கு நேரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட சட்டத்தரணி, இந்த ஆவணங்கள் அத்தகைய அழைப்புகள் தொடர்பான தரவைக் காட்டுகின்றன. இந்தநிலையில் அவை துல்லியமானவை அல்ல என்று சொல்ல முடியுமா? என்று மைத்திரியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மைத்திரி, தொழிநுட்பத்தைப் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. எனவே, அந்த அறிக்கைகளைப் புரிந்து கொள்ள எனக்கு அறிவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கேள்வி எழுப்பிய சட்டத்தரணி, கடந்த ஆண்டு ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 21 வரை சாட்சிக்கும் முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளருக்கும் இடையில், 20 தொலைபேசி உரையாடல்கள் இருந்தன என்பதை இந்த பதிவுகள் நிரூபிக்கின்றன.

எனவே, ஏப்ரல் 04ஆம் திகதியன்று கிடைத்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை குறித்து முன்னாள் அரச புலனாய்வின் முன்னாள் தலைவர் சாட்சியான உங்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதை நாங்கள் நம்ப வேண்டும் என்று நீங்கள எதிர்பார்க்கிறீர்களா? என்று சட்டத்தரணி மைத்திரியிடம் வினவினார்.

இதற்கு பதிலளித்த மைத்திரி, இந்த தொலைபேசி பதிவுகளைப் பற்றி தமக்கு பெரிய புரிதல் இல்லை என்று கூறியுள்ளார்.

இதன்போது சட்டத்தரணி சாமில் பெரேரா தனது இளைய சட்டத்தரணிகளில் ஒருவரை முன்னாள் ஜனாதிபதிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது தொலைபேசி தரவுகள் இருந்தபோதிலும் தாம்; அவரிடம் பல முறை பேசியதை தாம் ஏற்கப் போவதில்லை. நிலந்த எனது அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்திருக்கலாம், ஆனால் தாம் அவரிடம் அந்தளவு நேரம் பேசினேன் என்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மைத்திரி தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 20ஆம் திகதியன்று மாலை 4.12 மணியளவில் வெளிநாட்டு புலனாய்வு தரப்புக்கள் உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அல்லது அதற்கு அடுத்த நாள் தாக்குதல் நடத்தப்படும் தெரிவித்ததாக தகவல்கள் உள்ளன.

இந்த நிலையில், அதே நாளில் மாலை 6.16 மணிக்கு நிலந்த ஜெயவர்தன முன்னாள் ஜனாதிபதிக்கு தொலைபேசியில் அழைத்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் அரச புலனாய்வுத்துறை பணிப்பாளரின் பதிவுகள் எதைக் காட்டினாலும், அந்த நேரத்தில் தாம் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக சாட்சி பதிலளித்தார்.

2019 ஏப்ரல் 20 அன்று நீங்கள் சிங்கப்பூரில் இருந்தபோது எந்த தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லை என்று நீங்கள் கூறினாலும், பதிவுகளின் மூலம் உங்களது கொழும்பு இல்லத்திலிருந்து கையடக்கத்தொலைபேசிக்கு ஏராளமான அழைப்புகள் வந்துள்ளமையை சிங்கப்பூரில் இருந்த உங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்

அதற்கு பதிலளித்த சாட்சி, “உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். அன்று நான்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன், அந்த நேரத்தில் நான் இருந்த நிலையை, ஊடகங்கள் முன் தெரிவிக்க விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்.

அப்படியானால், குண்டு வெடிப்பு நடப்பதற்கு சற்று முன்னர் 2019 காலை 7.49 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள உங்கள் தொலைபேசிக்கு கொழும்பில் உள்ள உங்கள் இல்லத்தில் இருந்து 1 நிமிடம் 38 வினாடி அழைப்பை நிலந்த ஜெயவர்தன உங்களுக்கு வழங்கினார் என்று சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனைப்பற்றி கூறவேண்டும் என்று சட்டத்தரணி கோரினார்.

இதற்கு பதிலளித்த மைத்திரி, இது பதிவுகளில் இருந்தாலும் அதை நான் ஏற்கவில்லை. அப்போது நான் பேசும் நிலையில் இல்லை. நான் உண்மையைச் சொல்கிறேன். தேவைப்பட்டால் நான் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

தாக்குதல் இடம்பெற்ற காலை நேரத்தில் பேசுவதில் சிரமம் இருப்பதாக இப்போது நீங்கள் கூறினாலும், அன்று காலை உங்கள் தொலைபேசியில் ஏராளமான அழைப்புகள் இணைக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுபோன்ற பதிவுகள் காட்டப்பட்டாலும், நான் இந்த அறிக்கைகளை நிராகரிப்பதாக மைத்திரி குறிப்பிட்டார்.

தாக்குதல் நடந்த நாளில் உங்களுக்கு பேசுவதில் சிரமம் இருந்ததாக குறிப்பிட்டாலும் இந்த தாக்குதலுக்குப் பிறகு நீங்கள் தொடர்ந்து 07 அழைப்புகளை எவ்வாறு எடுத்திருக்க முடியும்? என்று சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.