மாவீரர் நாள் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

Report Print Dias Dias in இலங்கை
2380Shares

யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை, நீண்டநேர விவாதத்தின் பின்னர் குறித்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் மாகாண நீதிமன்றுக்கு இல்லையென தெரிவித்தே நீதிமன்றம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமென்பதால் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதால், வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தள்ளுபடி செய்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், அர்ச்சனா, காண்டீபன், சயந்தன் என சுமார் 15 இற்கும் அதிகமானோர் மன்றில் பிரசன்னமாகினர்.

பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுதாரர்களில் ஒருவரான வல்வெட்டித்துறை கம்பர் மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, தனது மகன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்தார் என்றும் அவரை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

you my like this video