வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடை விதிப்பு

Report Print Rusath in இலங்கை
83Shares

எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க பல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.

மட்டக்களப்பு

மாவீரர் நிகழ்வுகளை நடத்த தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏறாவூர் நீதிவான் நீதிமன்றினால் மாவீரர் நிகழ்வுகளை நடாத்த தமிழ் உணர்வாளர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடை உத்தரவு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் க.மோகனிடம் ஏறாவூர் பொலிஸாரினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நீதிமன்றில் ஏறாவூர் பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்த வழக்கையடுத்தே இந்த உத்தரவு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தி - நவோஜ்

திருகோணமலை

திருகோணமலை – சம்பூரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதித்து மூதூர் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பூர் – கிழக்கு ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதனூடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமென பொலிஸாரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பொதுமக்கள் உள்ளிட்ட 10 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த மூதூர் நீதவான் இன்று தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு நிகழ்வுகளை நடத்தவோ அங்கு பிரவேசிக்கவோ தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று வேறு இடங்களில் விளக்கேற்றல் மக்களை ஒன்று சேர்த்தல், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்தவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தி - முபாரக்

மன்னார்

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து மரணித்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம் பெற இருந்த இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தடைக்கு எதிராக எதிர் வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதி மேன் முறையீடு செய்ய இருக்கின்றோம். அந்த மேன் முறையீட்டின் ஊடாக தடையை நீக்கி 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நடாத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

செய்தி - ஆஷிக்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, மாங்குளம், மல்லாவி ஆகிய 5 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் எங்குமே மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த ஐந்து பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு தலைவர் உட்பட குழுவுக்குமாக 41 பேருக்கு தடை உத்தரவுகள் பெறப்பட்டிருக்கிறது.

செய்தி - தீசன்