இலங்கையை அடைந்தது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான தூதுக்குழு

Report Print Sujitha Sri in இலங்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான இந்திய அரசின் தூதுக் குழு இலங்கையை வந்தடைந்துள்ளது.

அதன்படி இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஐந்து அதிகாரிகளுமே நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த குழு இந்திய அரசுக்கு சொந்தமான விமானத்தில் புதுடில்லியிருந்து இன்று முற்பகல் 11.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

தூதுக்குழுவை வரவேற்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த குழு இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமட் தீதியுடன் மாலைத்தீவு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதிநிதிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும், முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.