தமிழீழம் அமைந்தே தீரும்! சுதந்திரத் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு உறுதியாக நடக்கும்; வைகோ

Report Print Dias Dias in இலங்கை
426Shares

சுதந்திரத் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளான நேற்றைய தினம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைகோ தமது இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாள், தமிழீழத் தாயகத்தை மீட்பதற்காக, தாயக விடுதலைக்காகத் தங்கள் உயிர்களை ஈந்த மாவீரர்கள் நினைவைப் போற்றுகின்ற நாள்.

உலகம் இதுவரை கண்டும், கேட்டும் இராத மாபெரும் விடுதலைப் புரட்சியை நடத்திய தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆணையை ஏற்று, அவரைத் தங்கள் நெஞ்சில் உயிராகக் கருதுகின்ற மாவீரர்கள், வீராங்கனைகள், களத்தில் நின்று போராடி, தங்கள் உயிர்களை ஈந்தனர்.

1982 ஆம் ஆண்டு, லெப்டிணன்ட் கர்னல் சங்கர் என்ற சத்தியநாதன், சிங்களப்படைகளின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு, மருத்துவத்திற்காகக் கடல்தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்தார்.

அப்போது இங்கே இருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய மடியில் தலை வைத்தவாறு, தாய் தந்தை உறவுகளைப் பற்றிஎண்ணாமல், தம்பி, தம்பி என்று தலைவரைப் போற்றி உயிர் துறந்த நாள், இந்த நாள் ஆகும்.

இனி இந்த நாள் மாவீரர் நாளாகப் போற்றப்படும்; அவர்களுடைய தியாகம் நினைவுகூரப்படும்; அவர்கள் சிந்திய செங்குருதியின் மீது ஆணையிட்டு, நமது தாயகக் கனவுநிறைவேறுவதற்காக களத்தில் போராடுவோம் என, வன்னிக் காடுகளுக்கு உள்ளே, தேசியத்தலைவர் பிரபாகரன், 1989 நவம்பர் 2 ஆம் நாள் அறிவித்தார்.

அந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், பெப்ரவரியில், நான் அங்கே வன்னிக்காடுகளுக்குச் சென்று, தேசியத் தலைவருடனும், விடுதலைப் புலிகளுடனும் இருந்தேன்.

இன்று உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில், ஈழச் சகோதரர்களும், சகோதரிகளும், மாவீரர் நாள் கடைப்பிடிக்கின்றார்கள்.

உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத போரை விடுதலைப்புலிகள் நடத்தினார்கள். ஓயாத அலைகள், அக்கினி அலைகள், யானை இறவுப் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள்.

ஆனால், அதன்பிறகு, இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட ஏழு அணு ஆயுத வல்லரசுகள் சிங்களப் படைகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள்.

அதன் விளைவாக, விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. உயிர்க்கொடை ஈந்த மாவீரர்களின் உடல்களும், எலும்புகளும் அந்த மண்ணில்தான் கலந்து இருக்கின்றன.

அவர்கள் சிந்திய செங்குருதி வீண்போகாது. நான் பிரஸ்ஸல்சில் அறிவித்தது போல் சுதந்திரத் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும். தமிழ் ஈழம் அமைந்தே தீரும் என குறிப்பிட்டுள்ளார்.