கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிப்பு

Report Print Ajith Ajith in இலங்கை
219Shares

2020ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட 29 முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் சிறப்பு எல்லை கண்காணிப்பு பிரிவே இந்த முயற்சிகளை முறியடித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையும் போலியான கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்காக விமான நிலையத்தில் நவீன ஆய்வகத்துடன் கூடிய சிறப்பு எல்லை கண்காணிப்பு பிரிவு 2019 ஜூன் மாதம் நிறுவப்பட்டது.

கடவுச்சீட்டுகளின் ஸ்கேனர், சரிபார்ப்பு இயந்திரம் மற்றும் நுண்ணிய இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ஆவண ஆய்வகம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு வழங்கியது.

இந்த நவீன ஆய்வகம் 2019ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் சிறப்புப் பிரிவை ஆரம்பித்த போது, ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் பல உயர்மட்ட இராஜதந்திர பணிகளுடன் இணைக்கப்பட்ட வான் தொடர்பு அதிகாரிகளால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் பணிகளில் அமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையிலேயே 2020 ஜனவரி 01 முதல் டிசம்பர் 25 வரை ஆண், பெண் என மொத்தம் 29 பேர் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் கனடாவுக்கு செல்ல முயற்சித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.