தமிழ்ச்சோலை பெயர் மாற்ற விடயம்! நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Banu in இலங்கை
608Shares

கிளிநொச்சி தமிழ்ச் சோலை வித்தியாலயம், கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருவது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், பாடசாலையின் பெயர் மாற்றத்தில் தன்னால் எதனையும் செய்ய முடியாது என வலியுறுத்தியுள்ளார்.

இன்றை தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி தமிழ்ச் சோலை வித்தியாலயம், கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னிச்சையாக செயற்பட்டு, தன்னுடைய புகைப்படத்தை பாடசாலையில் தொங்கவிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பெயர் மாற்றம் சட்ட ரீதியாக இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதன்போது கருத்து வெளியிட்ட சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய புகைப்படத்தை பாடசாலையில் தொங்கவிட்டுள்ளதோடு, தன்னை பாடசாலையின் நிறுவுனர் எனக் கூறிக்கொள்வது சரியான எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், பாடசாலையின் பெயர் மாற்றம் சரியான நடைமுறையின் கீழ் இடம்பெற்றுள்ளதாக மீண்டும் குறிப்பிட்டார்.

எனினும் மீண்டும் கருத்து வெளியிட்ட சிறீதரன், இந்தப் பாடசாலை 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக நீங்களே குறிப்பிடுகின்றீர்கள். எனினும் 2010ஆம் ஆண்டு அதனை தான் உருவாக்கியதுபோல் காட்டிக்கொள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிப்பதாக மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு கல்வி அமைச்சர் பதிலளிக்கையில், "இந்த பெயர் மாற்றமானது, அதிகாரிகள் மட்டத்தில் படிப்படியான அனுமதியுடன் இடம்பெற்றுள்ளது. அமைச்சின் தலையீடு எதுவும் இல்லை. அதனைவிட அமைச்சிற்கு மிகப்பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை. இந்த தீர்மானமானது பெற்றோர் தரப்பில் இருந்து வந்தது. இதற்கமைய அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

எனினும் சிறீதரன் மீண்டும் அதே கேள்வியை எழுப்பியுள்ளார்.

”என்னால் தனித்து தீர்மானம் மேற்கொள்ள முடியாது. பெற்றோரின் வேண்டுகோளுக்கு அமைய அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர். அமைச்சர் என்ற வகையில் எதுவும் செய்ய முடியாது.” என கல்வி அமைச்சர் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.