பிரித்தானியாவில் உருவான புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவும் ஆபத்து : சுதத் சமரவீர

Report Print Ajith Ajith in இலங்கை
64Shares

பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவும் ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினருக்காக எல்லைகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருபவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளில் புதிய வைரஸ் திரிபு உள்ளதா என்பதை ஆராயும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

பிரித்தானியாவில் இருந்து அனைத்து வானூர்திகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், புதிய வைரஸின் ஆபத்து இன்னும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய வைரஸ் திரிபு வேறு பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனவே, இத்தகைய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினரை நாம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தினசரி நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றுக்கள் பதிவாகும் சூழ்நிலையில்,பாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

எனவே, பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளில் தங்கியிருக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.