ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும் - சிங்கள ஊடகம் விமர்சனம்

Report Print Dias Dias in இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல போவதில்லை என சட்டமா அதிபர் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பிள்ளையான் விடுதலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து சிங்கள இணையத்தளம் விமர்சனமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தான் பதவிக்கு வந்து இரண்டு வருடத்திற்கு பின்னர் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா “உண்மையை” புரிந்துக்கொண்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இது மாத்திரம் போதாது எனவும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறான நிலைமையில் 2005 ஆம் ஆண்டு டிம்பர் மாதம் நத்தார் ஆராதனையில் கலந்துக்கொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் ஏதோ ஒரு காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் நிரபராதியான தன்னை கைது செய்து நீண்டகாலம் சிறையில் அடைத்தமைக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு எதிராக தற்போது வழக்கு தொடர வேண்டும். இதன் மூலம் அரைவாசியான நீதியே கிடைக்கும்.

மீதமுள்ள அரைவாசி நீதியை பெற்றுக்கொள்ள 2017 ஆம் ஆண்டு தனக்கு எதிராக கட்டாயம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர வேண்டும். அன்றைய சட்டமா அதிபரான தற்போதைய பிரதம நீதியரசரை இதில் சிக்க வைக்க முடியும்.

வெறுமனே வழக்கு தொடர்வது மாத்திரம் போதாது. எதிர்காலத்தில் இப்படி அநீதியான செயல்களை அவர் செய்யாதிருக்க பெருந்தொகை இழப்பீட்டை கோர வேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக மாத்திரமல்லாது இளம் வயது முதல் அரசியலில் ஈடுபட்ட சிரேஷ்ட அரசியல்வாதியான கருணாவுக்கு அடுத்து இரண்டாவது புகழ் நாமத்தை கொண்டுள்ளதால், அந்த புகழுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ஆயிரம் பில்லியன் இழப்பீட்டை கோர வேண்டும்.

இறுதியாக பிள்ளையானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை “ எமது நாட்டில் எப்போதாவது உண்மை தோற்று போகும்” என்பதையே இலங்கை மக்களுக்கு இறுதியாக கூற வேண்டியுள்ளது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.