அடையாளம் காணக்கூடிய கொத்தணித் தொற்றுடன் இணைக்க முடியாத கொரோனா தொற்றுக்கள் இருப்பதை மறுக்க முடியவில்லை என இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போது, நாட்டில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முடக்கல் விதிமுறைகளை மீறுவதே இதற்கான காரணமாகும்.
தொற்றுக்கள் அதிகரிக்கும் போது, நடைமுறையில் உள்ள கொத்துக்களுடன் எந்த தொடர்பும் இல்லாத தொற்றுக்களும் இருக்கலாம்.

எனினும் கொத்தணி நிலை தொற்றுக்கள் மட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தவே முயற்சிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை பதிவான 800இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்களில் 50 முதல் 60 தொற்றுக்கள் எந்த கொத்தணியுடனும் தொடர்பு இல்லாமல் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் தொற்று சமூகத்துக்கு பரவும் நிலையை எட்டியிருந்தால், தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இரட்டிப்பாகவோ அல்லது அதிகமாகவோ இருந்திருக்க வேண்டும்.
இருப்பினும் தமது அமைச்சு இந்த விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள்ளார்.