இலங்கை அரசாங்கம் சார்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணை தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு

Report Print Dias Dias in இலங்கை
267Shares

இலங்கை தமது அரசியலமைப்புக்கு உட்பட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை அரசாங்கம் சார்பில் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிரேரணையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது வெளிவிவகார அமைச்சு மட்டத்திலும், சம்பந்தப்பட்ட துறைகள் மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஒரு முக்கியஸ்தரிடம் வினவியபோது என சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதில், ஒரு பிரேரணையை கொண்டு வருவதற்கான உரிமை எங்களுக்கு இறைமையுள்ள நாடு என்ற வகையில் இருக்கின்றது. சகல நாடுகளுக்கும் அந்த உரிமை இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இலங்கை சார்பில் ஒரு புதிய பிரேரணை இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் என்பது உறுதியாக தெரிகின்றது. ஆனால் அரசாங்கத்தின் சார்பில் அந்த விடயம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறு தினம் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாளை மறு தினம் உத்தியோகபூர்வமாக பேரவையில் சமர்ப்பிப்பார். அதன் பின்னர் பல்வேறு நாடுகளும் இலங்கை தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைக்கும்.

அதேபோன்று இம்மாதத்தின் இறுதியில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை கனடா,ஜேர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தாக்கல் செய்ய உள்ளன. அது தொடர்பான ஒரு புதிய வரைவு தற்போது இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் அவ்வாறு ஒரு பிரேரணையை குறிப்பிட்ட நாடுகள் முன்வைக்கும் பட்சத்தில் அதனை எதிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இலங்கை அரசாங்கம் பிரேரணையை எதிர்க்கும்போது அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும்

அந்த வகையில் மார்ச் மாதம் 22ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஜெனிவாவில் நடைபெறும் என்கிற நிலையில், இலங்கை மேலுமொரு பிரேரணையை ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கும்போது அது தொடர்பான வாக்கெடுப்பு 22ஆம் திகதியளவில் இடம்பெறும்.

அதாவது இலங்கையின் பிரேரணையை 47 உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒரு நாடு எதிர்க்குமாயின் மட்டுமே அங்கு அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால் உறுப்பு நாடுகள் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கும் என்பது இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை.

ஏற்கனவே இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி பிரதமர் மட்டத்திலும், ஜனாதிபதி மட்டத்திலும், வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலும், இராஜதந்திர தூதரகங்கள் ஊடாகவும் இலங்கைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சார நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மட்டத்திலும், சர்வதேச நாடுகள் மட்டத்திலும் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.