ஐ.நாவில் இலங்கை தோற்றால் காத்திருக்கும் நெருக்கடி

Report Print Dias Dias in இலங்கை
1726Shares

இறுதிப்போரின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 12,600 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று பிரபாகரனின் மரணத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமது தலைவராக ஏற்றுக்கொண்ட குமரன் பத்மநாதன் எவ்வித சட்டநடவடிக்கைகளுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறெனில் போர்க்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப்பிரிவின் உறுப்பினர்களையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியிருக்கிறார்.

அதுமாத்திரமின்றி இலங்கை இராணுவத்தின் கட்டளைகளின்படி செயற்பட்டவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களின் கட்டளைகளின்படி செயற்பட்டவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்து, இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் : இராஜதந்திர ரீதியான நெருக்கடிகளும் எமது யோசனைகளும்' என்ற தொனிப்பொருளில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில போர்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கை மீண்டுமொருமுறை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கை அதில் வெற்றியடையுமா ? அல்லது தோல்வியடையுமா? என்பது குறித்து இப்போது உறுதியாகக் கூறமுடியாது. எனினும் இதனைத் தொடர்ந்து எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெளிவாகின்றது.

2009 ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின் போது இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையிலேயே தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னரும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதில் நாம் தோல்வியடைந்தோம். அதனைத்தொடர்ந்து ஜீ.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. அதன் விளைவாக அதனை மையப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. மீண்டும் அதேபோன்றதொரு நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியதுடன், அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால், மீண்டும் அத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுமா என்ற கேள்வி இருப்பதுடன் அது நாட்டு மக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான தீர்வாக கடந்த 2018 ஆம் ஆண்டில் நாம் சில பரிந்துரைகளை முன்வைத்தோம் என்றார்.

You My Like This Video