தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஓர் அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது - குணசீலன்

Report Print Ashik in அறிக்கை
784Shares

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஓர் அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

யுத்ததின் பின் இலங்கை அரசாங்கத்திடம் சரணடைந்த நிலையில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் உடல் நலம் தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் வெளியாகியுள்ளது.

அவை எமக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள்,உடல் நலக்குறைபாடுகள், நோய் வாய்ப்பட்டுள்ள தன்மைகள் தொடர்பாகவும் பல தரப்பினரால் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக இடம் பெற்ற வடக்கு மாகாண சபை கூட்டத்தின் போது முதலமைச்சர் முன்னாள் போராளிகளின் நிலைமை குறித்து பிரேரனை ஒன்றை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் போராளிகள் தொடர்பில் வெளிவந்துள்ள பிரச்சினை குறித்து மேலதிகமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் இவ்விடையம் குறித்து வழியுறுத்தியுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் உடல்,உள சம்மந்தமான நிலை குறித்து தற்போது பொதுவாக சர்ச்சைக்குறிய நிலை காணப்படுகின்றது.

அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு காலத்தில் எவ்விதமான புனர்வாழ்வு முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எங்களுக்கு தற்போது ஐயப்பாடு தோண்றியுள்ளது.

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் மருந்துப்பொருட்கள் போன்றவற்றின் பக்க விளைவுகள் காரணமாக இவ்வாறான நோய்கள் மற்றும் மரணங்கள் தோற்றிவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எம்மிடம் ஏற்பட்டுள்ளது.

புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றப்பட்ட போராளிகளின் உள்ளத்தில் உண்மையாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், விடுதலை போராட்டம் தொடர்பான மனநிலை மாற்றப்பட வேண்டும்.

அவர்களிடம் மீண்டும் போராடும் திறன் அழிக்கப்பட வேண்டும் என்பது தான் மறைமுமாக இருக்கின்றது என்பது தெரிய வருகின்றது.

ஆனால் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் அல்லது புனர்வாழ்வு செயன்முறைகள் தொடர்பான வெளிப்படையான அறிக்கைகள் எவையும் இது வரை வெளியிடப்படவில்லை.

முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறான புனர்வாழ்வுகள் வழங்கப்பட்டது.எவ்வாறான செயன்முறைகள் பயண்படுத்தப்பட்டது.யாரால் வழங்கப்பட்டது போன்ற விடையங்கள் இது வரை எமக்கு தெரியாது.

முன்னாள் போரளிகள் குறித்த சர்ச்சையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாக இருந்தால் புனர்வாழ்வு காலத்தில் இவர்கள் அங்கு இருந்த போது மேற்கொள்ளப்பட்ட சகல செயன்முறைகளும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மருத்துவம்,உணவு,உளநலம் போன்றவை குறித்தும் எவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்பட்டமை குறித்தும் சம்மந்தப்பட்ட புனர்வாழ்வு நிலையங்கள் எமக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதனால் வெளிப்படைத்தண்மையினை காட்டுவதாக அமையும். அவ்வாறான மருத்துவ குறிப்புகள், அல்லது அறிக்கைகளை வழங்க அரசாங்கம் பின் நிற்குமாக இருந்தால் எமது சந்தேகம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாங்கள் மேலும் விபரங்களை சேகரிக்கவும், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம் எனவும், எவ்வாறாக இருப்பினும் புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எதிர்காலம் சம்மந்தமாக பொறுப்புக் கூறவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது தான் உண்மை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments