முன்னாள் போராளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்

Report Print Mawali Analan in அறிக்கை

அரசாங்கத்தினால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறான உதவிகள் வழங்கப்படும் போது குறித்த மக்கள் அல்லது பயனாளிகள் அரச பயங்கரவாதத்துடன் தொடர்பு அற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொடுக்கவும் என மேலும் ஒரு விண்ணப்பப் படிவம் அரசினால் கோரப்படுகின்றது .

இந்த விண்ணப்பத்தை தேவையற்ற விடயமாக நாம் கருதுகின்றோம். என ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ்.ஞானசிறி தெரிவித்தார்.

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

குறித்த அமர்வின் போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸ் அறிக்கைகள் உள்ளன, இறப்பு ஏற்பட்டது எனில் மரணச்சான்றிதழ் உள்ளது. இவ்வாறு இருந்தும் மக்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கும்போது குறித்த பயனாளி அரச விரோதச் செயலில் ஈடுபடவில்லை என்பதும் நிரூபிக்கப்படவேண்டும் என அரசு தெரிவித்து வருகின்றது. இது அவசியமற்ற விடயம். இதனை அரசாங்கம் நீக்கவேண்டும் என்ற ஆலோசனையை நாம் முன்வைக்கின்றோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டால் அதற்கான ஆவணங்களைப் பெற்றுவிட்டு வழங்க வேண்டியதுதான். இது தவிர கிராம உத்தியோகஸ்தர்களால் பயனாளிகள் பற்றி மேலும் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டியது தேவையற்ற விடயமாகும்.

இதேவேளை முன்னாள் போராளிகள் தற்போது இறக்கின்றார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன தெரிந்தோ தெரியாமலே யுத்தம் ஒன்று நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னாள் போராளிகள் பலர் ஊனமுற்ற நிலையில் தற்போது ஜனநாயகவாழ்வில் இணைந்து குடும்பத்தோடு இணைந்து வாழ்ந்து வரும்வேளையில் மீண்டும் அவர்கள் தொழில் தேடுவது என்பது முடியாத காரியம்.

எனவே அரசாங்கம் இவ்வாறானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வளவு காலம் அரசு இப்படியானவர்களுக்கு எதுவித தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தினாலேயே தற்கொலைகள் இடம்பெறுகின்றன.

எனவே இவற்றை அரசு கவனத்தில் எடுத்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் எஸ்.ஞானசிறி குறிப்பிட்டார்.

Comments