துப்பாக்கி முன்னிலையில் பொதுமக்கள்! சுதந்திரத்தின் அர்த்தம் என்ன?

Report Print Mohan Mohan in அறிக்கை

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை முதல் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.

மிகுதிக்காணியை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் மீண்டும் கடந்த புதன்கிழமை ஒன்று கூடி இன்று சனிக்கிழமைக்கு முன்னர் காணிகளை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று சனிக்கிழமை காலை பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திரத்தின் அர்த்தம் என்ன?

1948ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தை எமது குடிசைகளில் கொண்டாடிய நாம் இன்று இராணுவத்தினரின் துப்பாக்கிகளுக்கு முன்நின்று போராட வேண்டியுள்ளது.

அப்படியானால் சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? எமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று நாம் கருத முடியுமா? என்று கிளிநொச்சி பரவிபஞ்சான் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்று காலை பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடிய பொதுமக்கள் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது மேற்படி கேள்ளி எழுப்பியுள்ளனர்.

குறித்த இடத்தில் இதுவரை பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பொதுமக்களுக்கு எந்தவொரு தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் இன்று கண்டன போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments