பூட்டிய சிறைதான் ஈழத்துப் பிள்ளைகளுக்கு புதைகுழியா? அடைக்கப்பட்ட இரும்பு சிறைக்குள் கைதிகள்

Report Print Sumi in அறிக்கை

அம்பு விட்ட மானைப் போல அடைப்பட்ட சிறையில் விடுதலைக்காய் போராடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இரக்கமுள்ள இலங்கை மாந்தரே நல்லாட்சியின் மனச்சாட்சியை தட்டித்திறக்க வலியுறுத்தி கைதி உடை அணிந்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச கைதிகள் தினமான இன்று திங்கட்கிழமை மன்னார் பிரஜைகள் குழு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்.மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

கடந்த 22 வருடங்களாக ஏக்கங்கள், நிராகரிப்புக்கள், அவமானங்கள் அருவருப்புக்களை சுமந்துகொண்டு நடை பிணங்களாய் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சமூகப் பிரச்சினையாக கருதி நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியதுடன், நீதித்துறையினால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய கூட்டரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மட்டும் பாராமுகம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

உள்நாட்டு ஆயுதக் கிளர்ச்சி செய்த ஜே.வி.பி யினருக்கு இரண்டு தடவைகள் பொது மன்னிப்பு வழங்க முடியுமென்றால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

15 முதல் 22 வருடங்களுக்கு மேலாக எமது அரசியல் கைதிகள் பட்ட துயரம் போதாதா? பூட்டிய சிறைதான் ஈழத்துப் பிள்ளைகளுக்கு புதைகுழியா? அன்று சொந்த நிலத்தில் சுதந்திரமாகவும், சுகமாகவும் வாழ்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இன்று வீதியில் இறங்கி விடுதலைக்காக கோசமிடும் போது, சமத்துவம் சாத்தியமா?

தமிழ் தலைமைகள்? தேசப்பற்றாளர்களே தமிழர் வாழ்விற்காக தம்மையழித்து தமது உயிர் காக்க எவரும் இல்லையா? இரும்பு அறைக்குள் இருந்து ஈர விழி கசிகிறார்கள் ஈழத்துப் பிள்ளைகள் உங்களால் எதுவும் முடியாதா?

ஊர் வாழ வேண்டுமென்று உரத்துக் குரல் கொடுத்த சமூகப் போராளிகளை சிறைமீட்க சாதி, மத, மொழி கடந்து நல்லாட்சி அரசாங்கத்தின் மனக்கதவினை தட்டித் திறக்க தமிழ் மக்களை ஒன்றிணைந்து குரல் கொடுக்க அழைப்பும் விடுத்துள்ளனர்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி யாழ்.நகரப்பகுதிகளில் துண்டுப்பிரசுரமும் விநியோகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Latest Offers

loading...

Comments