இராணுவம் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை - சொந்த நிலங்களை கைப்பற்ற தயாராகும் வலி. வடக்கு

Report Print Thamilin Tholan in அறிக்கை

இராணுவம் எங்களைச் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை சொந்த நிலப்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராக இருக்கிறோம் என வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ். சஜீவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலும், பலாலி இராணுவப் பிரதேசத்திலும் இராணுவத்தினரிடமுள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் எஸ். சஜீவன் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் மூலமாகவே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாகக் குறித்த நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும், இதற்கெனத் தனக்கு ஆறு மாத காலம் வரை கால அவகாசம் வழங்குமாறும் கேட்டிருந்தார்.

இதன் பிரகாரம் எமது மக்கள் பொறுமை காத்து வந்த நிலையில் தற்போது இராணுவத் தளபதி புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக வட கிழக்குப் பிரதேசத்தில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கள், நடவடிக்கைகள் என்பன தொடர்ந்த வண்ணமுள்ளன. ஜனாதிபதி சொல்வதைக் கூடக் கேட்க முடியாத நிலையில் இராணுவத்தினர் இருந்து கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தினர் குடாநாட்டிலோ, வட - கிழக்கிலோ நிலை கொண்டிருக்கும் வரை தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை நிம்மதியாகச் செய்ய முடியாது.

இன்றும் எங்களுடைய மக்கள் 31 நலன்புரி நிலையங்களிலும் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களது சொந்த நிலத்திற்குச் செல்வதற்குத் தயாரான நிலையில், அதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இராணுவத் தளபதி இவ்வாறான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி பல்வேறு வகைகளிலும் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சூழலில், தற்போது ஜெனிவாவின் 31ஆவது கூட்டத் தொடர் நடைபெறுகின்ற நிலையில் இராணுவத் தளபதி இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி எங்கள் மக்கள் காணிகளை விடுவிப்பதாகத் தெரிவித்து ஆறு மாதங்கள் கடந்திருக்கிறது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்திலும் கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற ஒரு நிலைமையே தொடர்ந்தும் நீடித்து வருகிறது. ஆகவே, இனியும் நாங்கள் பொறுமை காப்பதற்குத் தயாரில்லை.

எங்களுடைய நிலப் பரப்புக்குள் நாங்கள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராக இருக்கின்றோம். தொடர்ந்தும் இராணுவம் எங்களுடைய நிலப் பரப்புக்குள் குடியிருக்க நாங்கள் அனுமதிக்க முடியாது.

யுத்தம் கடந்து ஏழு வருடங்கள் கடந்த சூழ்நிலையிலும் எங்களுடைய வளங்கள் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தங்களுடைய உல்லாச வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, இனியும் நாம் இந்த விடயத்தில் தாமதிக்க முடியாது. எங்கள் மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளில் மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில், இராணுவம் எங்களைச் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை எங்களுடைய சொந்த நிலப் பரப்புக்குள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராகவிருக்கிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரை இங்கு இராணுவ ஆட்சியே இடம்பெறுகின்றது. இந்த இராணுவத்தைத் தான் ஐ நாவில் பணியாற்றுவதற்கும் கேட்டிருக்கின்றார்கள்.

ஆகவே, எமது மண்ணில் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மாணவர்களை படுகொலை செய்த இராணுவம், பாலியல் துன்புறுத்தல்களைச் செய்து கொண்டிருக்கின்ற இராணுவம், தமிழர்களுடைய நிலப் பரப்பை முறைகேடாக பிடித்து வைத்திருக்கின்ற இந்த இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.

ஆகவே, எங்களுடைய சொந்த நிலப் பரப்பை நாங்கள் கைப்பற்றுவதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை எனவும் எஸ். சஜீவன் தெரிவித்தார்.

Comments