சிறுநீரக மோசடி - இந்தியர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Mohan Mohan in அறிக்கை

சிறுநீரக மோசடி தொடர்பில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் ஏழு பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஏழு பேரும் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் நீதவான் மொஹமட் நிஹால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிறுநீரக மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து எட்டு இந்தியர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வீசா இன்றி தங்கிருயிருந்தமையும் தெரியவந்ததுடன், மிரிஹான குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களில் பிரதான சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், எஞ்சிய ஏழு பேரும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளார்.

Comments