வடக்கில் மருத்துவ சேவைகளை மேம்படுத்த முனையும் வைத்தியர்கள் - உயிரிழந்த வைத்தியருக்கு நிதியுதவி

Report Print Sumi in அறிக்கை
158Shares

வடமாகாண மருத்துவர் மன்றம் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு யாழில் நடைபெற்றது.

வடமாகாண மருத்துவர் மன்றத்தின் தலைவர் ப. அச்சுதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வைத்திய நிபுணர்களான ஆர். கணேசமூர்த்தி மற்றும் திருமதி கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சலலோகத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வைத்தியர் அரவிந்தன் விளக்கப்படங்களுடன் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து அண்மையில் விபத்தின் மூலம் உயிரிழந்த வைத்தியரின் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வடமாகாண மற்றும் புலம்பெயர் வைத்தியர்களினால் சேகரிக்கப்பட்ட 1.2 மில்லியன் ரூபா நிதியினை அவரது மகனிடம் வடமாகாண மருத்துவ மன்றத்தின் தலைவர் ப. அச்சுதன் மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆர். கேதீஸ்வரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வின் போது மருத்துவ சங்கத்தின் தலைவர் ப. அச்சுதன் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண மருத்துவர் மன்றம் என்பது வடமாகாணத்தில் பணிபுரிந்த, பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்களின் நீண்ட கால கனவின் செயல் வடிவமாகும்.

வட மாகாணத்தின் வைத்தியர்களை ஒன்றிணைத்தலும் அவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் நன்மைகளைப் பேணலும், வடக்கின் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி, எமது மக்களின் சுகாதாரம் அல்லது ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாளாந்த பணிகளுக்கு அப்பால் சேவைகளை வழங்கல் போன்ற நோக்கங்களை இலக்கு வைத்து இந்த மருத்துவ மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை அடைய வைத்தியசாலை மற்றும் நோயாளர் தொடர்பான உதவிகளை வழங்கல் வைத்தியர்களின் சேவை மேம்பாட்டுக்குத் தேவையான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் போன்றவை முன்னெடுக்கப்படும்.

மேலும் மருத்துவ முகாம்களை நடாத்துதல் மருத்துவர்களின் தொடர் கல்வியூட்டலுக்கான வழிகளை இலகுவாக்கல் வைத்தியர்களிடமிருந்து மேம்பட்ட சேவைகளை மேலும் பெறுவதற்காக அவர்களுக்கான நலன்களை மேம்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை இந்த மருத்துவ மன்றம் ஒரு தொழிற் சங்கம் அல்ல. இது ஒரு நலன்புரி அமைப்பு மட்டுமே. இவ்வமைப்பு மக்களுக்கு சிரமங்களைத் தரும் தொழற்சங்க நடவடிக்கைகளில் மட்டுமல்லாது அடையாள வடிவிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதென்றும் வடமாகாண மருத்துவ சங்கத்தின் தலைவர் ப. அச்சுதன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், வடமாகாண மருத்துவர்கள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும், யாழ்மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments