காணிகளை அபகரிக்க முயலும் வனவளஇலாகா - ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்

Report Print Mawali Analan in அறிக்கை
106Shares

இன்று காலை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலில் தோணிக்கல் விவசாயிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தமது தோணிக்கல் நீத்தை ஆறு, தோணிக்கல் மேற்குக்கண்டம், தோணிக்கல் தென்கண்டம், டிப்போமடு ஆகிய பிரதேசங்களிலுள்ள 2587 ஏக்கர் காணிகளை வனவள அதிகாரிகள் நில அளவை செய்து கையகப்படுத்தும் செயற்பாட்டைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் நிலம் மக்களுக்கே எமதுமக்கள் வனபரிபாகத்தின் நிலத்தினை கோரவில்லை மக்களின் நிலத்தினையே கோருகின்றனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இதன் போது அங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எ.கே.கோடீஸ்வரன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் ஆகியோர் விஜயம் செய்து ஆர்ப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக கூட்டத்தை நடாத்தினர்.

குறித்த கூட்டத்தின் போது விவசாயிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். எனினும் வனபரிபாலன இலாகா சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இதன் காரணமாக சகல தரப்பினரையும் இணைத்து கலந்தாலோசித்த பின் இறுதி முடிவை வெளியிடுவது என அங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

1962 முதல் சேனைப்பயிர்செய்கையிலும் பின்பு விவசாயச் செய்கையிலும் ஈடுபட்டுவந்த எமக்கு 1969இல் நடாத்திய காணிக்கச்சேரியில் காணிக்குரிய அனுமதிப்பத்திரம் தரப்பட்டது.

பின்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் காலத்தில் ஜயபூமி திட்டத்தின்கீழ் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஆக மொத்தத்தில் அக்காணிகளுக்குரிய உரிமம் எங்களிடமிருக்கின்றது.

இந்த நிலையில் வனவள இலாகா அதிகாரிகள் தன்னிச்சையாக எல்லைக் கற்களை நட்டு எமது காணியை அபகரிக்க முயல்வது குறித்து வேதனையடைகின்றோம்.

அது அவர்களது காணியென்றால் அதற்கான உரிமங்களைக் காட்டட்டும். 2010.10.01 ஆம் திகதி வர்த்தமானியில் குறித்த எல்லைக்குட்பட்ட காணிகளை யாரிடமும் கேட்காமல் வன இலாகாவிற்குச் சொந்தமான காணிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தல் வெளியிட முன்பு எமக்கோ பிரதேச செயலகத்திற்கோ அறிவிக்கப்படவில்லை. எனவே இன்றைய நல்லாட்சியில் இப்படிப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்று கருதுகின்றோம். இக்காணிகளை எமது உயிர் போனாலும் விடமாட்டோம் என்று எ.கே.கோடீஸ்வரன், உட்பட அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரனிடமும் ஏனைய அரசு அதிகாரிகளிடமும் கையளித்தனர்.

Comments