எத்தனை கைகள் வந்தாலும் என்னுடன் போட்டியிட முடியாது - மஹிந்த மைத்திரிக்கு விடுத்துள்ள சவால்

Report Print Mawali Analan in அறிக்கை
540Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கைச்சின்னத்தில் எதிர் வரும் தேர்தலில் போட்டியிடப் போவது அறிந்த விடயமே.

அதே சமயம் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இது வரையிலும் புதிய கட்சி தொடர்பில் எந்தவித கருத்துகளையும் வெளிப்படையாக அறியப்படுத்தவில்லை.

ஆனாலும் இன்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இருக்கும் மஹிந்த எவ்வகையிலும் புதிய கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்ற கருத்துகள் ஒரு புறம் இருக்க புதிய கட்சி ஆரம்பமாகும் என்றும் கருத்துகள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

அண்மையில் மஹிந்த தலைமையில் 'இலங்கையின் மக்கள் சக்தி - முன்னோக்கிய பாதை' என்ற தொணிப்பொருளில் சுதந்திரக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது .

இங்கும் கைச்சின்னமே காணப்பட்டது. இதன் நோக்கம் எதுவாக இருக்கும் என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை எனினும் சுதந்திரக் கட்சிக்கு போட்டியாகவே மஹிந்த தரப்பினர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்கள் என கூறப்படுகின்றது.

அதே சமயம் எத்தனை கைகள் வந்தாலும் என்னுடன் போட்டியிட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மஹிந்த விடுத்த சவாலாகவே இந்த நடவடிக்கை காணப்படுவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மஹிந்த தலைமையில் சுதந்திர கட்சிக்கு நாம் ஆதரவாக இருக்க மாட்டோம், எமது ஆதரவு என்போதும் மஹிந்தவிற்கே என பகிரங்கமாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சுதந்திரக் கட்சியினை எதிர்த்து மைத்திரியை வெளியேற்றி ஆட்சியையும் சுதந்திரக்கட்சியையும் மஹிந்த கைப்பற்ற முன்னெடுக்கும் செயற்பாடுகளாகவும் இது அவதானிக்கப்படுகின்றது.

இவேளை மஹிந்த தனது புதிய கட்சி தொடர்பில் சரியான சமயத்தில் வெளியிட ஆயத்தமாகும் செயற்பாடாகவும் குறித்த சின்ன விவகாரம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மஹிந்த மைத்திரிக்கு சவாலாக அமைந்துள்ளார் என்பது அறிந்த விடயமே. அதனை மறைமுகமாக வெளிப்படுத்திய செயற்பாடாகவே இந்த கைச்சின்ன விவகாரம் காணப்படுகின்றது.

Comments