வலி. கிழக்குப் பிரதேசத்தினைச் சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளர்கள் பொலிஸாரின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று சுமார் 50 இற்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.
வலி. கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறுப்பிட்டி, அச்சுவேலி, நவக்கிரி, தம்பாலை, பத்தமேனி ஆகிய பகுதியில் உள்ள மக்கள் தமது அன்றாட தொழிலாக கல்லுடைக்கும் தொழிலையே நம்பி இருக்கின்றார்கள்.
கல்லுடைக்கும் தொழிலை செய்துவரும் தம்மை கனியவள திணைக்களத்திற்கு 50,000 ரூபா பணம் செலுத்தி அனுமதியினை பெற்று கல்லுடைக்கும் தொழிலை செய்யுமாறு பொலிஸார் கூறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறும் தம்மால் 50,000 ரூபா பணம் செலுத்தி அனுமதி பெற முடியாதெனவும், தமது அன்றாட வாழ்வாதாரமாக கல்லுடைக்கும் தொழிலை நம்பியிருக்கும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றதாகவும் தெரிவித்தனர்.
தமது தொழிலை மேற்கொள்வதற்கும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் குறைந்த செலவில் கனிய வள திணைக்களத்திடம் அனுமதியினைப் பெற்றுத் தருமாறும், கல்லுடைக்கும் தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்ள அனுமதி தருமாறும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் கையளித்தனர்.
புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் தான் இவ்விடயத்தினை பார்க்க வேண்டுமென கூறியதை தொடர்ந்து, யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்.கொழும்புத்துறையில் உள்ள கனியவள திணைக்களத்திற்கு ஊர்வலமாக சென்று தமது கோரிக்கையினை முன்வைத்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் நிறைவில், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிரதிப்பணிப்பாளர் சி.கே.கருணானந்தவிடம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் மகஜர் கையளித்தனர்.