வடமாகாண சபைக்கு புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு மாகாணசபை ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
வட மாகாணசபையின் 64ஆம் அமர்வு இன்று(27) மாகாணசபை பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற விடயத்தில் முதலமைச்சரின் உத்தரவையும் மீறி செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகனாதன் கடந்த மாதம் முதலாம் திகதி மரணமடைந்தார். இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.
தற்போது பிரதி முதலமைச்சராக வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா உள்ளார். இவருக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
“தற்போது தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தான் வரும்வரை பிரதி அவைத்தலைவரை நியமிக்க வேண்டாம், நான் வந்தவுடன் தெரிவு செய்கின்றேன்” எனக் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக குருகுலராஜா தெரிவித்தார்.
எனினும் முதலமைச்சர் வரும்வரை காத்திருக்க முடியாது என்றும் புதிய பிரதி அவைத்தலைவர் இன்றே நியமிக்கப்பட வேண்டும் என்றும் வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமர்வு தொடர்ந்து 12 மணிவரை முன்னெடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே குழப்ப நிலை நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக புதிய பிரதி அவைத்தலைவர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, அனந்தி சசிதரன் மற்றும் கமலேஸ்வரன் ஆகியோரது பெயர்களே பிரதி அவைத்தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள.
அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு 30 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.