சம்பூரில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட அனல் மின் நிலையத்திற்கு சொந்தமான காணியில் தொடர்ந்து வசித்துவரும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மூதுார் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (7) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மூதுார் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பூர் பகுதியில் அமையவிருந்த அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரியைத் துறைமுகத்தில் இருந்து அனல்மின் நிலையத்திற்குக் கொண்டு செல்லவென கடற்கரைச்சேனை கிராமத்தில் காணி ஒதுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த காணிக்குள் வசித்து வந்த மூன்று குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு தொடர்ந்தும் மறுத்து வந்த நிலையில் அவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரசாங்கம் சார்பில் மூதுார் பிரதேச செயலகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.