பள்ளிவாசல்களுக்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்த வேண்டும் - ரிஷாத் அவசர கோரிக்கை

Report Print Sujitha Sri in அறிக்கை
71Shares

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பள்ளிவாசல்கள் மீது ஆங்காங்கே அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் மூலகர்த்தாக்களை அடையாளம் காண்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் உதவும் எனவும், இதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு நம்மாலும் உதவமுடியும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரிஷாத் குறிப்பிட்டுள்ளார்.

இரவு வேளைகளிலேயே இந்தசம்பவங்கள் இடம்பெறுவதனால் கண்காணிப்புக் கமராக்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அறிந்துகொள்வதற்கு பொலிஸாருக்கும் இது உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களையும், சகோதர சிங்கள மக்களையும் முட்டி மோதவைத்து அதன் மூலம் ஆதாயம் பெற சில சக்திகள் தற்போது முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக செயற்படவேண்டியதன் அவசியத்தையும், உலமாக்கள் மூலம் வலியுறுத்துவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் அமைச்சர் ஹலீமிடம் சுட்டிக்காட்டியுள்ளார்

Comments