பொலிஸாரின் போக்குவரத்து பாதுகாப்பு ஊர்வலம்

Report Print Navoj in அறிக்கை
47Shares

வாழைச்சேனையில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விஷேட பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ''பாதுகாப்பாக சென்று வருவோம் ''என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் நேற்று (07) புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.பி.அர்ஜூன ரத்ணாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பாதுகாப்பாக சென்று வருவோம் என்ற தொனிப்பொருளினான விழிப்புணர்வு ஊர்வலம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக ஓட்டமாவடி சுற்று வட்டத்திற்கு சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்தை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.பி.அர்ஜூன ரத்ணாயக்க உரையாற்றியுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இவ்வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் பன்னிரெண்டு பேர் மரணித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.பி.அர்ஜூன ரத்ணாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரு நாளைக்கு விபத்தின் காரணமாக ஏழு பேர் அண்ணளவாக மரணமடைகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முப்பத்தேழாயிரத்துக்கு மேல் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றது. ஒரு நாளைக்கு நூற்றி பத்துக்கு மேல் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றது.

ஒரு வருடத்திற்கு பாரிய விபத்துக்கள் ஐயாயிரத்துக்கும் மேல் காணப்படுகின்றது. நாட்டில் பாரிய விபத்துக்கள் ஏற்படுகின்றமை காரணமாக நாட்டிற்கு பாரிய நட்டம் ஏற்படுகின்றது.

இதேபோன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 2015ஆம் ஆண்டு 145 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதுடன், இவ்வருடம் (2016) 80 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதுடன், அதில் பன்னிரெண்டு பேர் மரணித்துள்ளனர்.

கடந்த வருடத்தை விட இவ் வருடம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விபத்துக்கள் குறைவடைந்து காணப்படுகின்றது எனவும் இதன்போது கூறியுள்ளார்.

Comments