தமிழகம் கடந்த வருடம் தண்ணீரில் இந்த வருடம் கண்ணீரில்.. எத்தனை கோடி செலவு தெரியுமா?

Report Print Nivetha in அறிக்கை
386Shares

கடந்த வருட இறுதியில் தமிழகம் வெள்ளத்தால் தண்ணீரில் மூழ்கியது. இந்த வருடம் இறுதியில் கண்ணீரில் நனைந்துக் கொண்டு இருக்கின்றது.

தமிழகத்தை மட்டுமல்ல, உலகத் தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது ஜெயலலிதாவின் மரணம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.

லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரபல மருத்துவர் ஜான் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் இணைந்து சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.

ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி, கடந்த 5ஆம் திகதி மரணமடைந்தார். சர்வதேச தரத்தினாலான உயர் சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

75 நாட்களும் ஜெயலலிதாவிற்கு அரசு தரப்பில் செலவிடப்பட்ட தொகையை அறிய, தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பலர் முயன்று வருகின்றனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் அனைத்தையும், அரசே ஏற்றுக் கொள்ள விதிகளில் வாய்ப்புள்ளது.

அந்த அடிப்படையில்தான், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறன், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட பலருக்கும், அரசுத் தரப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில் மொத்தம் 30 அறைகள் உள்ளன.

முதல் 2 நாட்களுக்கு மற்ற நோயாளிகளும் அதில் இருந்தனர். அதன் பின்னர் அங்கு இருந்த அனைவரும் மாற்றப்பட்டு முதல்வர் மட்டுமே அந்த தளத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கென தனியாக அறை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையின் உயர் ரக அறையான சூட் ரூமின் ஒரு நாள் வாடகை 26,300 ரூபாய் என கூறப்படுகின்றது.

இரண்டு சூட் ரூம்களை இணைத்து புது அறையாக மாற்றப்பட்டு இருந்தால் ஒருநாளைக்கு முதல்வர் அறைக்கு மட்டும் 52 ஆயிரத்து 600 ரூபாய் வாடகையாகும்.

அந்த தளத்தில் உள்ள மற்ற 28 அறைகளில் 8 அறைகள் பொது வார்டாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொது வார்டுக்கு, அறை ஒன்றுக்கு 3,500 ல் இருந்து 5,200 ரூபாய் வரை நாள் வாடகை வசூலிக்கப்படுகிறது.

அடுத்த 10 அறைகள் தனி வார்டுகள், அறை ஒன்றுக்கு ரூ.8,500ல் இருந்து ரூ.8,800 வரை உள்ளது. மீதம் உள்ள அறைகள் மூன்று வகை சூட் ரூம்கள் உள்ளன. அதன் தொடக்க வாடகை 12,500 ரூபாயில் இருந்து 26,300 வரை உள்ளது.

மொத்தம் முதல்வர் தங்கிய, தங்காத என அந்த தளத்துக்கான ஒரு நாள் வாடகை மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும் என்கின்றனர்.

கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவுக்கு, ஆறு கோடி ரூபாய் வரை, மருத்துவத்துக்காக செலவிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையை, அரசு தரப்பில் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல கோடி செலவழித்தும் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது என்பதுதான் மிகப்பெரிய துயரமாக காணப்படுகின்றது.

இதேவேளை, முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில், எங்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஜெயலலிதாவை ஒருமுறைகூட நேரில் காட்டவில்லை. ஒரு புகைப்படம்கூட வெளியிடப்படவில்லை.

மேலும், ஜெயலலிதாவின் உடல் கெட்டுப் போகாமல் இருக்க மருந்துகள் அளிக்கப்பட்டு உள்ளதா? மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவர், நினைவோடுதான் இருந்தாரா.? என பல கேள்விகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுக்களாகவே இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments