களுத்துறை நாகொட சென்றல் சந்தியில் உள்ள வங்கி ஒன்றின் அடக்கு வைக்கும் நிலையத்திற்குள் நேற்று முன்தினம் பிரவேசித்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொள்ளையிட முயற்சித்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இந்த நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கரந்தெனிய இராணுவ முகாமில் பணியாற்றி வருவதாகவும் அவர் கட்டுக்குருந்த பிரதேசத்தை சேர்நதவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து பயாகல மாலேகொட பிரதேசத்தில் ஆறு ஒன்றில் போடப்பட்டிருந்த நிலையில், ரி 56 ரக துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து சென்ற சந்தேகநபர், அடகு நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் மதியம் 1.30 அளவில் புகுந்து துப்பாக்கி பிரயோகம் செய்து பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளார்.
வங்கி பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தில் வங்கியின் கட்டடத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.