வடக்கில் தொழிலுக்குச் செல்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Report Print Sumi in அறிக்கை
2180Shares

கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் கட்டாயம் உயிர்பாதுகாப்பு அங்கியை அணியுமாறு அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குருநகர் பகுதியில் கடற்றொழிலுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை குருநகர் பகுதியில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட சுறாவளியின் போது குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் சடலங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன.

குறித்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்திற்கு மீனவர்களின் குடும்பங்கள் அறிவிக்கவில்லை.

அத்துடன் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. இவ்வாறு கடலுக்குச் செல்பவர்கள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமென்பதுடன், உயர் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்துமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதேவேளை, மீன்பிடிக்கச் சென்று காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டதுடன், மீன்பிடி படகுகளை வைத்திருக்கும் மீனவர்கள் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மீன்பிடிக்கச் சென்று உயிரிழப்பவர்களுக்கான இழப்பீடுகளை அரசாங்கத்திடம் இருந்து பெற முடியுமென்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, மீனவ குடும்பங்கள் காப்புறுதிகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.

எனவே, கடற்றொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் ஆபத்தான காலப்பகுதிகளில் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடலுக்குச் செல்லும் போது உயிர்பாதுகாப்பு அங்கிகளை அணிந்து செல்லுமாறும் அதிகாரிகள் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்கள்.

இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பிரதேசசெயலர் பொ.தயானந்தன் மற்றும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை, மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் பா.ரமேஸ், பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர், மீனவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Comments