தமிழர்களின் இன அழிப்புக்கு டக்ளஸே காரணம் : செல்வராசா கஜேந்திரன்

Report Print Sumi in அறிக்கை
303Shares

இராணுவத்துடன் துணை இராணுவ குழுவாக செயற்பட்டு வடமாகாணத்தில் கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் அழிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று(09) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

டக்ளஸ் தேவானந்தா யாழில் நடைபெற்ற கொலைகளுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழ் மக்களின் அழிவுகள் அனைத்திற்கும் அவரே பொறுப்புக் கூற வேண்டும்.

சந்திரிக்கா அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா துணை இராணுவ குழுவாக கடந்த 20 வருடங்கள் செயற்பட்டிருந்தார். வடமாகாணம் முழுவதிலும் துணை இராணுவ குழுவாக ஈ.பி.டி.பியினரின் செயற்பாடுகள் இருந்து வந்துள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுக்களில் சாட்சியமளித்த பொதுமக்கள் தமது பிள்ளைகளை கடத்தியதும் காணாமல் ஆக்கியதும் ஈ.பி.டி.பியினர் என சாட்சியமளித்துள்ளார்கள்.

வடபகுதியில் இடம்பெற்ற கொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். சர்வதேச விசாரணை நேரடியாக நடைபெறுமானால், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் உட்பட பலர் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

யாழ்.மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மரண தண்டணைக்குப் பிறகு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் மக்கள் மத்தியில் சென்று 10 வாக்குகள் கூட பெற முடியாது.

தாம் பரிசுத்தமானவர்கள் என காட்ட வேண்டுமென்பதற்காக பொய்களைச் சொல்லி பிறர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகின்றார்.

கடந்த 20 வருடங்களாக துணை இராணுவ குழுவாக இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு இரத்தக் கறைகளுடன் இருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இவ்வாறான பொய்யான அறிக்கை வெளியிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ஷவின் வலது கையாக இருந்த டக்ளஸ் தேவானந்தா தற்போது மைத்திரி அரசின் கைக்கூலியாக இருக்கின்றார்.

நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தீர்ப்பினால் ஏற்பட்ட அபகீர்த்தியை மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதனால் இவ்வாறு செயற்படுகின்றார். மேலும் பொது மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரை துரோகியாக பார்க்கின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பற்றி கதைப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு எந்த அருகதையும் கிடையாது.

தமிழ் மக்களுக்காக தனது தந்தையாரை இழந்துள்ளார். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு முழுப் பொறுப்பும் டக்ளஸ் தேவானந்தாவே ஏற்க வேண்டும்.

கள்ள வாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, தான் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவன் என சர்வதேசத்திற்குச் சென்று புலிகள் பயங்கரவாதிகள் எனக் கூறி பிரச்சாரம் செய்து, புலிகளை அழிப்பதற்கு ஆதரவு திரட்டிக் கொடுத்தவர்கள் ஈ.பி.டி.பியினர் என்றும் சுட்டிக் காட்டினார்.

தமிழ் மக்களின் அனைத்து அழிப்பிற்கும் ஈ.பி.டி.பியினரே முழு பொறுப்பும். ஏமக்கு ஏற்படுத்தும் அனைத்து பாதிப்புக்களும் தமிழ் இனத்தினைப் பாதிக்கும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Comments