எழுக தமிழ் பேரணிக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அழைப்பு!

Report Print Thileepan Thileepan in அறிக்கை
80Shares

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்னும் சத்திய வாக்கிற்கு அமைய எமது அடிமைத் தளையை தகர்த்தெறிய தேன் பாடும் மீன்நாடாம் மட்டு நகரில் சங்கமிப்போம் வாரீர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை(21) மட்டுநகரில் தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள எழுக தமிழ் பேரணியில் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு அமைவாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவும் தமிழ் மக்கள் பேரவையால் கடந்த 24.09.2016 அன்று யாழ் மண்ணில் எழுக தமிழ் பேரணி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

அதில் தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு எமது அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் அனைவருக்கும் எடுத்துரைத்திருந்தோம்.

இருந்தும் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

தென்னிலங்கை அரசியல் சமூகம் முந்தைய ஆட்சிகளைப் போன்றே எம்மை அடிமைப்படுத்தும் செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

பிரச்சினைக்குத் தாங்களே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிலங்கை அரசியல் சமூகம் அதனைத் தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் முன்வரவில்லை.

எம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பதிலேயே தங்களது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று இன்னமும் அவர்கள் நம்புகின்றனர்.

அவர்களின் இந்த நிலையை சர்வதேச சமூகத்திற்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

இணைந்த வடக்கு கிழக்கில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான எமது சுயாட்சிக்கான கோரிக்கை நியாயமானதே என்பதை இப்பொழுதாவது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் நாம் எத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினோமோ அவை இந்த இரண்டு வருட இணக்க அரசியலிலும் அவ்வாறே உள்ளன.

எமது நல்லெண்ணத்தை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.

சர்வதேச சமூகத்தை அவ்வப்போது சமாளித்து அவர்களைத் திருப்திப் படுத்தினால் போதும் என்ற நிலைக்கு இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டு அரசாங்கமும் வந்துள்ளது.

எதனை நம்பி தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்கு அளித்தார்களோ அந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் ஆணை சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்பேசும் மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலைக் குற்றவாளிகள் என்று நிரூபணம் ஆகக்கூடியவர்களே நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமலேயே நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக வெஞ்சிறையில் கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.

சட்டரீதியாகவும் அவர்களை விடுவிக்க முடியவில்லை. அரசியல் ரீதியாகவும் அவர்களை விடுவிக்க இந்த அரசாங்கத்திற்கும் விருப்பமில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையக மாநாடு வரை காத்திருக்க வேண்டும்.

இந்த காலநீட்டிப்பும் இழுத்தடிப்பும் தொடர்கதையாகிவிட்டது. காணி அபகரிப்பு புதிய வடிவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நின்றபாடில்லை.

பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக மத வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்றன. மக்களின் மத உணர்வுகள் தூண்டப்படுகின்றன.

அரசியல் தீர்வு தொடர்பில் அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களின் நல்லெண்ணமும், நல்லிணக்கமும் இனி தேவையில்லை என்ற நிலைக்கு தென்னிலங்கை அரசியல் சமூகம் வந்துவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகின்றது.

எனவே எமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டு அரசாங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதால் தீர்வு கிட்டாது என்பதும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் அழுத்தமும் இன்றியமையாதது என்பதும் முன்னெப்பொழுதையும் விட இப்பொழுது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஆகவே எமது மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் எமது கோரிக்கைகளையும் அதன் நியாயத்தையும் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் சாத்வீகமான முறையில் வலியுறுத்தும் முகமாக ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று மட்டு நகரில் சங்கமிப்போம் வாரீர்.

சமூக ஆர்வலர்களே, புத்திஜீவிகளே, தொழிற்சங்கப் பிரதிநிதிகளே, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளே, கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே, உழைக்கும் வர்க்க தோழர்களே, சட்டத்தரணிகளே, தொழில்சார் விற்பன்னர்களே, நாளாந்த வாழ்க்கைக்காக உழைக்கும் கூலித்தொழிலாளர்களே, வான்பொய்த்ததால் பயிர்ச்செய்கைக்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமலும்

வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாமலும் அல்லலறும் விவசாயப் பெருமக்களே, வாழ்க்கைச் செலவு காரணமாக குடும்பத்தைக் கொண்டு நடத்த துன்பப்படும் பொதுமக்களே சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினையும் சேர்ந்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது கோரிக்கையை முன்வைத்து எமது அடையாளத்தைக் காப்பதற்காகக் குரல்கொடுக்க வேண்டிய தருணம் இது.

எமது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டிய இத்தருணத்தில் சிலர் பொங்கல்விழா நடத்த முற்படுகின்றனர்.

மக்களின் எழுச்சியைத் தடுப்பதாக நினைத்துக்கொண்டு மிகவும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

விழா எடுக்கும் நிலையிலா இன்று தமிழ்ச் சமூகம் இருக்கின்றது? அதிலும் விவசாயிகளின் பயிர்ச்செய்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கவலையுற்றிருக்கும் நிலையில், அவர்களைக் கேலி செய்யும் விதமாக பொங்கல்விழா நடத்துகின்றனர்.

அதற்கான ஏற்பாடுகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சியின் செயலாளராகவும் கிழக்கு மாகாணத்தின் விவசாய அமைச்சராகவும் இருப்பவரால் செய்யப்படுகிறது.

தமிழரசுக் கட்சி எந்த அளவிற்கு மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். தமிழரசுக் கட்சியின் இந்தச் செயற்பாடானது தமக்கு வாக்களித்த மக்களை அவமதிப்பதாகும்.

விவசாய அமைச்சர் என்ற வகையில் அவர்களது கடன் சுமைகளைக் குறைப்பதற்கு ஏதேனும் வழிசெய்திருந்தால் அதனைப் பாராட்டலாம்.

குறைந்தபட்சம் அதற்கான அறிவிப்பு ஏதேனும் விடுக்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது விவசாய உறவுகள் ஓரளவிற்காவது நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

ஆனால், இவை எதையும் செய்யாமல் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் வரண்டுபோயுள்ள அவர்களது வயலையும், வயிறையும் அறியாமல் பொங்கல்விழா எடுக்கிறார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவரையும் அழைத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் கூட்டமைப்பின் தலைவராகச் செல்லப்போகிறாரா? எதிர்க்கட்சித் தலைவராகச் செல்லப்போகிறாரா? என்பது தெரியாமல்

உள்ளது.

இதில் சம்பந்தன் கலந்துகொண்டால் அவரையும் தங்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் என்றே தமிழ் மக்கள் கருதுவார்கள்.

ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணியைக் குழப்புவதாக எண்ணி பொங்கல் விழா எடுத்தால் அது தமிழரசுக் கட்சிக்கு கொள்ளிக்கட்டையால் முதுகைச் சொறிந்துகொண்ட கதையாகவே முடியும்.

சரியான நேரத்தில் தவறான முடிவை எடுக்கும் வல்லமை தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு யாருக்கு வரும்?

வடக்கு கிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாம் ஒரு தேசிய இனம் என்பதை வலியுறுத்துவதற்காக வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் வாரீர்.

எமது கோரிக்கை முழக்கங்கள் விண்ணை முட்டட்டும். அந்த முழக்கங்கள் கடலலையின் ஊடாகவும் வான்வழியாகவும் சர்வதேச நாடுகளின் கதவுகளைத் தட்டட்டும் என்று இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments