ஏறு தழுவுதல் போராட்டங்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு

Report Print Thamilin Tholan in அறிக்கை
102Shares

ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக தமிழகத்தில் இடம்பெற்று வரும் எழுச்சியான போராட்டங்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் என்றும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் உப தலைவரான மறவன் புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் குறித்து அவரின் மனநிலை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

காளைகளை அடக்கி மங்கையரை மணம் முடிப்பதற்குத் தகுதி வாய்ந்த ஏறு தழுவுதல் எனும் மரபு ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததொரு வீர விளையாட்டு.

இன்று வரை தமிழர்கள் பாரம்பரியம் பாரம்பரியமாக ஏறு தழுவுதல் விளையாட்டை மிகவும் ஆர்வத்துடன் கடைப்பிடித்து வருகிறார்கள் எனில் அது மரபினுடைய ஒரு தொடர்ச்சி.

தமிழகத்தில் ஏறு தழுவுதல் தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளிவராத காரணத்தால் அது தடையெனக் கொள்ளப்படுகிறதே தவிர முற்று முழுதாகத் தடை விதிக்கப்படவில்லை.

ஏறு தழுவுதல் ஒரு மரபு சார்ந்த, பண்பாடு சார்ந்த ஒரு விளையாட்டாகக் காணப்படுகின்றமையால் யார், யார் அந்த மரபுகளைக் காக்க முன் விரும்புகிறார்களோ அவர்களை நாங்கள் தடுப்பது முறையல்ல.

தைப்பொங்கல் போன்ற பல மரபு சார்ந்த நிகழ்வுகள் கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களால் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு பதிவு மாத்திரமன்றிக் காலம் காலமாகக் கல்வெட்டுக்களில், ஏடுகளில், செப்பேடுகளில் குறிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இவ்வாறான எமது பாரம்பரியம், பண்பாடு சார்ந்த நிகழ்வுகளை எமது தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்குண்டு என்றார்.

தமிழர் மரபுகள் எங்கிருந்தாலும் பேணப்பட வேண்டும். அதே ஏறு தழுவுதல் விளையாட்டு நிகழ்வு ஈழத்திலே நடைபெறுமானால் நிச்சயமாக அதனை நாங்கள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், ஈழத் தமிழ் மக்களும், தமிழக மக்களும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் என அவர் இதன் போது கூறியமை குறிப்பிடத்தக்கது.

Comments