கம்பஹா நகரில் பாலுறவைத் தூண்டக் கூடிய மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கம்பஹா மாநகரசபையின் முன்னாள் மேயர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நகரில் நடத்தப்பட்டு வரும் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவ மாணவியரே இந்த மருந்து வகைகளை அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.
கம்பஹா நகர மருந்தகங்களில் அதிகளவில் பாலுறவைத் தூண்டக் கூடிய மாத்திரைகளும் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
மிகவும் இளவயதானவர்களே இந்த மருந்து வகைகளை அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கம்பஹா நகரில் நடைபெறும் தனியார் வகுப்புக்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான மாணவ மாணவியர் வருகை தருகின்றனர். கம்பஹா நகரை மையப்படுத்தி பாலியல் உப கலாச்சாரமொன்று உருவாகியுள்ளது.
இந்த அழிவில் கம்பஹா நகரத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் அதிகம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் தனியார் வகுப்புக்களுக்கு செல்கின்றனர்.
பிள்ளைகள் படிப்பதாகக் கூறி செய்யும் இந்த நாச வேலைகள் பற்றி பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கம்பஹா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிகளவான விடுதிகளில் இளம்ஜோடிகள் உல்லாசமாக கழிக்கின்றனர். இவற்றில் பல விடுதிகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது.
சில முச்சக்கர வண்டி சாரதிகளும் இந்த சட்டவிரோத செயற்பாட்டுடன் தொடர்புபட்டிருப்பதாக முன்னாள் மேயர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விரைவில் அம்பலப்படுத்த உள்ளதாகவும் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.