கடந்த வருடம் இறுதியில் சாவகச்சேரியில் நடந்த கோர விபத்தை யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இன்றுடன் அதில் உயிரிழந்த 11 பேரினதும் 31ஆம் நாள் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் சம்பவ இடத்தில் 10 பேரும் வைத்தியசாலையில் அனுமதித்த பிறகு ஒருவருமாக ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இன்று முற்பகல் 10:30மணிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்களால் நடாத்தப்பட்டுள்ளது.
தென் பகுதிக்கும் வட பகுதிக்கும் எத்தனை பிரச்சினைகள் காணப்பட்டாலும் இந்த விபத்து அவை அனைத்தையும் உடைத்தெரிந்து தென்னிலங்கை மக்களை நெகிழ்ச்சியில் மூழ்கடித்தது.
விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதும், உயிரிழந்த உறவுகளுக்காக சாவகச்சேரி மக்கள் பிரார்த்தனைகளை செய்ததும் தென்பகுதி மக்களையும், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
அரசியல் போட்டிகளின்றி, சாதி, இன, மத பேதமின்றி உதவிசெய்த அனைவருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் 31ஆம் நாள் நினைவஞசலிக்கு சர்வமத தலைவர்கள், சங்கத்தானை பகுதி மக்கள், இறந்தவர்களின் உறவினர்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தினர், பொலிஸார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த வருடம் டிசம்பர் 17ஆம் திகதி தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு சுற்றுலா சென்ற வானும், இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்ஸூம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.