அமைச்சர் பி.திகாம்பரத்தின் சர்வதேச மகளிர்தின வாழ்த்துச் செய்தி

Report Print Gokulan Gokulan in அறிக்கை
21Shares

பெண்கள் சமூக ரீதியில் எதிர்நோக்கும் கொடுமைகள் மற்றும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பெருக சொந்தக் காணியில் சொந்த வீட்டில் குடியிருக்கும் காலம் மலரத் தொடங்கியுள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

உலகெங்கும் வாழும் கோடிக் கணக்கான பெண்கள் இன்று சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கின்றார்கள். அவர்களுக்கு மலையக மக்கள் சார்பாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாகவும் இனிதான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

குறிப்பாக மலையக உழைக்கும் பெண்கள் வாழ்வில் அன்பும் இன்பமும் தங்க வேண்டும் என்பதற்காக எமது அமைச்சின் ஊடாக தலா ஏழு பேர்ச் காணியில் சொந்தமான வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றோம்.

சொந்த பந்தங்களுக்கு அப்பால், ஒரு மனிதன் சொந்த வீட்டில் குடியிருக்கும் நிலை உருவாக வேண்டும். சொந்தக் காணிக்கு உரித்துடையவர்களாக மாற வேண்டும்.

எனவேதான், கிராம அடிப்படையில் நாம் மேற்கொண்டு வரும் தனி வீட்டுத் திட்டத்தில் காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலையக சமூகம் இந்த நாட்டில் இருநூறு வருட கால வரலாற்றைக் கொண்டிருந்தளும் இப்போதுதான் காணி உரிமை கிடைக்க வழி பிறந்துள்ளது. அதேபோல், உழைக்கும் பெண்களின் குடும்பச் சுமையை சமாளிக்கும் வகையில் ஏற்ற பொருளாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

அத்தோடு பெண்களின் அரசியல் உரிமைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு25% இட ஒதுக்கீடும் தரப்பட்டுள்ளது. எனவே, மலையகப் பெண்கள் அரசியல் ரீதியிலும் தமது திறமைகளை வெளிப்படுத்த தயாராக வேண்டும் என அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Comments