9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள்

Report Print Vino in அறிக்கை
3774Shares

கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் இயேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

குறித்த கருத்து தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ப.அன்ரன் புனிதநாயகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைக்கு செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது.

இன்று பெரும்பான்மை கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒட்டு மொத்த கத்தோலிக்க சமூகமும் இணைந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களின் கருத்திற்கு வலுவான கண்டனத்தினை தெரிவித்து நிற்கின்றது.

அதேவேளை ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்களும் வடமாகாண முதல்வர் அவர்களின் மதவாதத்தை தூண்டும் கருத்திற்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டு நிற்கின்றது.

கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் ஆண்டவர் யேசுநாதரை, ஒன்பது சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு இணையத்தளங்களில் வெளியிட்ட கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்து நிற்கின்றோம்.

ஆண்டவர் யேசு உலகத்திலே அவதரித்து மக்களின் பாவங்களை போக்க கல்வாரி சிலுவையில் பாடுப்பட்டு மக்களுக்காக உயிர் விட்ட ஆண்டவர் யேசு கிறிஸ்துவை பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டுப் பேசியதை கத்தோலிக்க இறைமக்களும், கத்தோலிக்க திருச்சபையும் வன்மையாக எதிர்த்து நிற்கின்றோம்.

“ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்றும் இவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றிற்கு பரபரப்பான பேட்டி அளித்துள்ளமை மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் என மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்து நிற்கின்றது.

முதலமைச்சர் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு 14.04.2017 அன்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஆண்டவர் யேசுவை விமர்சித்துள்ளார்.

இது முற்றிலும் பிழையான விடயம் என்பதுடன் வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் பதவியானது சகல மதத்திற்கும் ஒரு பொதுவானதொரு பதவி.

அவ்வாறு இருக்கின்ற போது வடமாகாண முதலமைச்சர் அனைத்து செயற்பாடுகளையும் இனம், மதத்திற்கு அப்பால் செய்வதே சால சிறந்த விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்று வடமாகாணத்தை பொறுத்த மட்டில் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரவும் பகலும் வீதிகளில் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இவற்றை எல்லாம்

புறந்தள்ளிவிட்டு அவரின் மதம் சார்ந்த விடயத்தில் அக்கறை கொண்டு கத்தோலிக்க திருச்சபைக்கும் இந்து மதத்திற்கும் இடையில் இவ்வாறான பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளமை ஒரு முதலமைச்சருக்குரிய பண்பும், தகுதியும் இல்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்று இலங்கை நாட்டில் கத்தோலிக்க தமிழ் சிங்கள மக்கள் பரவலாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் வடமாகாண முதலமைச்சர் அவர்கள் வட மாகாணத்தில் சகல மத மக்களாலும் வாக்குகள் அளிக்கப்பட்டு தான் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு கதிரையில் அமர்ந்துள்ளார் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் அவர்கள் வடமாகாணத்தில் சகல மத மக்களுக்கும் பொதுவானதொரு மனிதனாக இருந்து கொண்டு மதங்களுக்கிடையில் பிரிவினைகளையும், மதவாத

கருத்துக்களையும் வெளியிடுவதாக இருந்தால் அவர் வடமாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேறி ஒரு பொதுவான தலைவர்களுக்கு இடம் விட்டுக்கொடுப்பதே பொருத்தமான விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ்வாறு எமது கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு பற்றி வடமாகாண முதலமைச்சர் சரியான விடயங்களை அறிய வேண்டும் என்று சொன்னால் கத்தோலிக்க திருச்சபையின்

மேற்றாசனத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்பதனையும் முதலமைச்சர் அவர்களுக்கு கூறிக்கொள்ளுகின்றோம்.

எனவே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உடனடியாக ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவை விமர்சித்து பேசியதற்கு கத்தோலிக்க திருச்சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் .

இல்லையெனில் இலங்கை முழுவதும் உள்ள தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்கள் அனைவருடைய கேள்விகளுக்கும், போராட்டத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதனை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், மன்னார், யாழ் மறைமாவட்ட சட்ட ஆலோசகருமான சிரேஸ்ட சட்டத்தரணி ப.அன்ரன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள் - ஆஷிக்

Comments