அனர்த்தம் ஏற்படும் என தெரிந்தே மீதொட்டமுல்லை குப்பை மேடு விவகாரம் இழுத்தடிப்பு செய்யப்பட்டது

Report Print Kumar in அறிக்கை
59Shares

அனர்த்தம் ஏற்படும் என்று தெரிந்தும் 300 அடி உயரமான குப்பை மேட்டை அகற்ற நாள்பார்த்து நாள்பார்த்து இழுத்தடிப்புச் செய்து, மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

சித்திரை புதுவருட தினத்தில் நடந்த இப்பாரிய துயர அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து உறவுகளின் துயரங்களில் நாங்களும் பங்கேற்பதுடன், பலியானவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் சகவாழ்வுக்குத் திரும்பவும் பிராத்திக்கின்றோம்.

2013ஆம் வருடம் தொடக்கம் பல தடவைகள் இக்குப்பை மேடு அகற்றுவது தொடர்பாக மக்கள் போராட்டங்களை நடாத்தி வந்த போதும் சம்பந்தப்பட்ட மாகாண மத்திய அரசின் இழுபறியினால் ஏற்படுத்தப்பட்ட இவ்வனர்த்தம் காரணமாக அமைந்துள்ளது.

பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் துறைசார் அதிகாரிகளின் எண்ணிக்கையும் திணைக்களங்களும் அதிகமாக உள்ளது. இருந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, திணைக்களங்களோ!அனர்த்தம் ஏற்பட்ட பின்னரே அதற்கு தீர்வு தேட விளைவது தான் வழக்கமாகிவிட்டது.

தமக்காக வழங்கப்பட்டுள்ள வேலைப்பழுக்களை, சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும். மாறாக நிர்வாக அசண்டையீனத்தினால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் தீர்வு தேடுவது பொருத்தமற்றதொன்றாகும்.

மீதொட்டமுல்லயில் சுமார் 30இற்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களை ஒரே நேரத்தில் காவு கொண்டு 180 குடும்பத்தின் 625 உறவுகளை அனாதரவாக நடுத்தெருவில் நிறுத்தியுள்ள குப்பை மேட்டுச் சரிவு செயற்கை அனர்த்தம் இயற்கையாய் உருவான அனர்த்தமல்ல.

உள்ளூராட்சி மன்றத்தின் குப்பை அகற்றல் திட்டமிடலின் சீரின்மையால் ஏற்பட்ட அனர்த்தமாகும். அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல் போனது வேதனைக்குரியது.

இதேபோன்றே ஊர்க்குப்பைகளை சேகரித்து மட்டக்களப்பு வாவியில் நிரப்பப்படுவதும், இயற்கை நீரோடைகள் அனர்த்த முகாமைத்துவ சட்டதிட்டங்களை மீறி நிரப்பப்பட்டு குடியிருப்புக் காணிகளாக மாற்றப்படுவதும், சில தனியார் வைத்திய நிலைய மருத்துவக் கழிவுகளும், சிறைச்சாலை கழிவுகளும் ஆற்றில் கலக்கவிடப்படுவதும் கரையோர வளங்கள் பேணல் திணைக்களங்களின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் கடற்கரை ஆக்கிரமிப்புக்கள், உள்ளூர், மாகாண அரசின் சட்டதிட்டங்களை மீறி மதுபான உற்பத்திச்சாலைகள் நிர்மானம் என மனிதனால் வலிந்து ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களுக்கான முன்னெடுப்புக்களை தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் முன்வர வேண்டும்.

அதேபோன்று குறித்த திணைக்கள அதிகாரிகளுக்கு பக்கபலமாக அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும். எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


you may like this..

Comments