வரியை அதிகரித்த பாகிஸ்தான்! நெருக்கடியில் வெற்றிலை உற்பத்தியாளர்கள்

Report Print Murali Murali in அறிக்கை

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளுக்கு பாகிஸ்தான் வரியை அதிகரித்துள்ளது.

இந்த வரி அதிகரிப்பின் காரணமாக பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், பாகிஸ்தான் தனது பாவனைக்காக பயன்படுத்தும் வெற்றிலைகளில் 80 வீதமானவை இலங்கையிலிருந்தே இறக்குமதி செய்கின்றது.

பாகிஸ்தானிய அரசாங்கம் தற்போது இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெற்றிலைக்கான வரியை அதிகரித்துள்ளது.

இதனால், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெற்றிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆண்டு தோறும் 30,000 மெட்ரிக் டொன்னுக்கும் மேற்பட்ட வெற்றிலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதன்மூலம் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் வெற்றிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கைக்கான பாகிஸ்தானிய பிரதி தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெற்றிலை உற்பத்தியாளர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான பாகிஸ்தானிய பிரதி தூதுவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.