லலித் வீரதுங்க, அனூஷ பெல்பிட்டவுக்கு பிணை

Report Print Shalini in அறிக்கை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குறித்த இருவருக்கும் பிணை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா மூன்று சரீரப் பிணையிலும் விடுவித்துள்ளது.

சரீரப் பிணை வழங்குபவர்களின் ஒருவர் நெருங்கிய உறவினராகவும் மற்றுமொருவர் அரச ஊழியராகவும் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களுக்கு வெளிநாடு செல்ல தடைவிதித்த நீதிமன்றம் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த பிணை தொடர்பில் விளக்கமளிக்க இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றின் தீர்ப்பை அதிகாரமற்றதாக்க வேண்டும் என லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவை பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் வரை பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளே இன்று மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.

கடந்த ஆட்சிக் காலத்தில், பிக்குகளுக்கான ஆடை பகிர்ந்தளிப்பின்போது இடம்பெற்ற மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், தலா 2 மில்லியன் ரூபா அபராதமும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு தலா 50 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.