தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுகின்றது: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

Report Print Thileepan Thileepan in அறிக்கை

இடைக்கால அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி முடிவெடுக்காமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படுகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தைக் கூட்டி அதில் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் அந்தக் கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

இடைக்கால அறிக்கை மற்றும் உள்ளூராட்சி மாகாணசபை தேர்தல்களுக்கான புதிய சட்டமூலம் ஆகியவை கொள்கை முடிவுடன் தொடர்புபட்ட விடயம்.

ஆகவே அவற்றை நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்டி அதிலெடுக்கப்படும் முடிவுகளை நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திற்குத் தெரிவிப்பதே சரியான ஜனநாயக அணுகுமுறை என்று நாம் கோரியிருந்தோம்.

எமது கோரிக்கையை நிராகரித்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்துவத்தை வலிந்து அதிகரித்துக்கொண்ட அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தமது கட்சி பெரும்பான்மையாக திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தைக் கூட்டி அதில் இரண்டு விடயங்களையும் விவாதித்து அவற்றிற்கு ஆதரவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அங்கத்துவக் கட்சிகள் மூன்றும் எதிர்த்தாலும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று வெளியுலகிற்குக் காட்ட முற்படுவதுடன், ஒட்டுமொத்த கூட்டமைப்பும் மக்களின் ஆணைக்கு மாறான இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டு விட்டது என்றும் காட்ட முற்படுகின்றார்.

தமிழரசுக் கட்சியின் இந்த தன்னிச்சையான முடிவிற்கு நாம் ஒருபோதும் துணைபோக முடியாது. இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் சரி பாதகமாக இருந்தாலும் சரி கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைமைப்பீடத்துடன் விவாதிக்கப்பட்ட பின்னரே அது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள்.

ஆகவே கட்சிகளுடன் கலந்துரையாடாமல் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் விவாதத்தில் பங்கெடுப்பது என்பது இயலாத காரியம். நாடாளுமன்ற விவகாரங்களை மட்டுமே நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் விவாதிக்க முடியும்.

தமிழரசுக் கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை மட்டும் கவனத்தில் எடுத்து அங்கத்துவக் கட்சிகளைப் புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்து அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டை ஏற்க முடியாது.

இந்த விடயம் தொடர்பாக ஏனைய அங்கத்துவக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் முடிவை அறிந்துகொள்வதற்காக 17-10.2017 செவ்வாய் அன்று காலை அவர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர்களும் எமது கருத்தையே கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

தமிழரசுக் கட்சியின் குறுகிய அரசியல் நலன்களுக்காக எமது மக்களின் ஆணையையும் அவர்களின் அபிலாசைகளையும் மீறி எம்மால் செயற்படமுடியாது என்பதையும் அதே நேரத்தில் எம்மை பகடைக்காய்களாகப் பாவிப்பதையும் அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.