அன்று விடுதலைப் புலிகளை காரணம் காட்டினார்கள்! மோடி அரசின் இரகசிய திட்டம் அம்பலம்

Report Print Murali Murali in அறிக்கை

இந்திய கடற்படையே தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதற்கு என்ன பொருள்? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

இது குறித்து அந்த கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “1983ஆம் ஆண்டிலிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு டீசல் மற்றும் ஆயுதம் கொண்டுசெல்கிறார்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்லியே சுமார் 800 பேரை சுட்டுக் கொன்றது. வலைகளை அழித்தது. படகுகளைப் பறித்தது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த பின்னும் இன்றுவரை மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை.

தொடரும் இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு மட்டும் காரணமில்லை. இந்திய அரசும்தான் காரணம் என்பது, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானதில்லை என மோடி அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததிலிருந்தே தெரியவந்தது.

ஆனால் அதை மறைக்க, இருநாட்டு மீனவர்கள் கூடிப் பேச்சு, இலங்கை அரசுடன் பேச்சு, அப்படி இப்படி என்றெல்லாம் நாடகமாடியது மோடி அரசு.

அதேநேரம் “எல்லை தாண்டி வந்தால் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் பேசினர் இலங்கை அமைச்சர்கள். இதை மோடி அரசு கண்டித்ததே இல்லை. அதனால் தமிழக மீனவர் தாக்கப்படுவதும் நிற்கவில்லை.

இந்தத் தாக்குதல் காரணமாக கடல்தொழிலே செய்ய முடியாத நிலை, தாக்குதலைக் கண்டித்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவதாலும் பெரும்பாலான நாட்கள் கடற்தொழிலை செய்ய முடியாத நிலையே.

ஆனால் கடற்தொழிலையே கைவிடச் செய்வதற்கான நிலையை ஏற்படுத்தவே இந்த தாக்குதல் என்பதுதான் கடைசியாகத் தெரியவந்திருக்கும் உண்மை.

அதன் அடிப்படையிலேயே இந்திய கடற்படையே இன்று தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை நோக்கி இந்தியக் கடற்படைப் படகு சீறிப் பாய்ந்து வந்திருக்கிறது.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் தங்கள் வலைகளை அப்படியே விட்டுவிட்டு அவசர அவசரமாக கரைக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால் இந்தியக் கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கைகளை மேலே தூக்கியப்பின் எந்தப் படையினரும் சுடுவதில்லை என்பதுதான் சர்வதேச நியதி. இதற்கு உலகில் ஒரே விதிவிலக்கு இலங்கைப் படையினர்தான்.

இலங்கைப் படையினரைப் போலவே இந்தியக் கடற்படையினரும் இன்று நடந்துகொண்டுள்ளனர். வலைகளைப் போட்டுவிட்டு, மீன்பிடிப்பதையும் நிறுத்திவிட்டு சரணடையும் விதத்தில் கரை திரும்பிய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அதில் பிச்சை என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். ஒரு படகையும் அதில் இருந்து மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து வைத்து மீனவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாக கரைக்குத் திரும்பிய மீனவர் இருதயம் என்பவர் சொன்னார்.

குண்டடிப்பட்டு இரத்தம் சொட்டியபடி இருந்த பிச்சையைத் தாங்கியபடியே இந்தச் செய்தியைச் சொன்னார் அவர். இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து, இதுவரை ஒரு முறைகூட தமிழக மீனவரைப் பாதுகாத்ததில்லை இந்தியக் கடற்படை.

இது ஏன் என்பதற்கான விடை சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் இன்று கிடைத்திருக்கிறது. ஏ

ற்கனவே கார்ப்பரேட்டுகளுக்காகவே மோடி ஆட்சி நடத்துவதை, அவர் எடுத்த நடவடிக்கைகளே சொல்வதாக இருக்கின்றன.

இப்போது கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவே செயற்கையாக மீனவர் பிரச்சனையை நீட்டித்து வருகிறார் என்பது புலனாகிறது. இதன் மூலம் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் நாசகார இரகசியத் திட்டம் அம்பலமாகிறது.

இல்லை என்றால் இந்திய கடற்படையே தமிழக மீனவரை சுட்டிருப்பதற்கு என்னதான் பொருள்? இதற்கான பதிலை தமிழக முதல்வர் பழனிச்சாமியிடமிருந்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்பார்க்கிறது” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.