மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

Report Print Nesan Nesan in அறிக்கை

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபையின் ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமாரே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் உயர் பதவியில் இருந்த நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி.சாள்ஸ் கடந்த 01.10.2017 அன்று சுங்கத்திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தார்.

இந்த நிலையில் நான்கு அதிகாரிகளுக்கு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் கடந்த வாரம் நேர்முகப்பரீட்சை நடத்தியிருந்தார்.

இதேவேளை, திருகோணமலை அரச அதிபர் புஷ்பகுமார் பதில் கடமைக்காக மட்டக்களப்பு அரச அதிபராக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு மாத காலமாக மாவட்ட அரச அதிபர் எவருமே இல்லாத மாவட்டமாக மட்டக்களப்பு காணப்பட்டது.

இந்தக் குறை நீங்கி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக மா.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மா.உதயகுமார் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும் இருந்து திறம்பட சேவையாற்றியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.