‘யாழில் குழந்தைகளுடன் தற்கொலை செய்த குடும்பம்’ ஓர் வாழ்க்கைப் பாடமாகும்! நீதிபதி இளஞ்செழியன்

Report Print Shalini in அறிக்கை

யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது அண்மையில் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், “இது ஒரு வாழ்க்கைப் பாடமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “மீற்றர் வட்டி, நாள் வட்டி, மாத வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவதும் தவறு.

மீற்றர் வட்டிக்கு சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகளும் சட்டவிரோதமானவை. வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை” எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். சுதுமலை பகுதியில் திரையரங்கம் அமைப்பதற்காக 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் திரையரங்கம் அமைப்பதற்கான வேலைகளை தொடங்காது இழுத்தடித்து விட்டு காசோலைகளை வழங்கியுள்ளார்.

அவை கணக்குகள் மூடப்பட்ட காசோலைகள். இதனால் பாதிக்கப்பட்ட நபர் பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் காசோலையை வழங்கியவர் பணத்தை வழங்கவேண்டும் அல்லது 2 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவிக்கவேண்டும் என யாழ். நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில்,

“மீற்றர் வட்டி, நாள் வட்டி, மாத வட்டி, என்பன சட்டவிரோதமானவை. அவை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடர முடியாது. வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அடகு பிடிக்கும் நிறுவனங்கள் கடன் வழங்கல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டவை. அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய வங்கி ஆளுநரிடம் உண்டு. நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்கினால் மத்திய வங்கிதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காசோலை வழங்கிக் கொண்டு பணத்தை வட்டிக்கு வழங்குவது, அந்தக் காசோலை திரும்பியதும் நீதிவான் மன்றில் வழக்குப் போடுவதும் நாளாந்தம் இடம்பெறுகின்றன.

காசோலையை வாங்கிக் கொண்டு பணம் வழங்குவது சட்டத்துக்கு முரணானது. திரும்பிய காசோலைக்கு மோசடியாக நீதவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்து பணத்தை மீளப் பெறுவதும் தவறானதே.

அவ்வாறு திரும்பிய காசோலை தொடர்பில் சிவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அங்கு ‘பிரதிபலன்’ எண்பிக்கப்பட வேண்டும்.

மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குவது சட்டவிரோதம். அதேபோன்று அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றின் ஊடாக மீளப்பெறுவது சட்டவிரோதமானது.

தற்கொலை செய்யக் கூடாது. தற்கொலை செய்யத் தூண்டவும் கூடாது. தற்கொலை செய்யத் தூண்டுவதும் குற்றமாகும், இத்தகைய சட்டவிரோத செயற்பாட்டால் ஒரு குடும்பமே காவு கொள்ளப்பட்டது. எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் இறந்துபோனார்கள். இது ஒரு வாழ்க்கைப் பாடமாகும்” என்று நீதிபதி மா. இளஞ்செழியன் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் - அரியாலையில் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி கடன் தொல்லை காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடன் தொல்லையால் குடும்பத் தலைவன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்த நிலையில், அதைத் தொடர்ந்து தாயார் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.

அரியாலை ஏ.வி. ஒழுங்கை சேர்ந்த கிருசாந்தன் சுநேத்திரா (வயது-28), ஹர்சா (வயது-4), சஜித் (வயது-2), சரவணா (வயது-2) என்பவர்களே தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.