தாதிய பரிபாலகர் குணசீலனின் இடமாற்றத்தை இரத்து செய்

Report Print Theesan in அறிக்கை

பருத்திதுறையில் தாதிய பரிபாலகராக பணிபுரியும் குணசீலனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டாமென வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் வைத்தியசாலையின் பணிப்பாளர் , வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் தெரிவிப்பது தற்சயம் யாழ்ப்பாண மாவட்டத்திலிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தாதிய பரிபாலகராக கடமையாற்றிவரும் குணசீலன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அறிகின்றோம்.

எமது வைத்தியசாலையினை பொறுத்த வரையில் தாதிய பரிபாலகர்கள் போதியளவில் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். தற்சமயம் குறித்த பரிபாலகரின் துணைவியாரும், சகோதரியும் எமது வைத்தியசாலையின் தாதிய பரிபாலகராக கடமையாற்றி வருகின்றனர்.

அத்துடன் குணசீலன் தாதிய பரிபாலகராக கடமையாற்ற அனுமதிக்கப்படுவாராயின் ஓர் குறித்த தாதிய பரிபாலகர்களது அலுவலக அறையில் கணவன், மனைவி, சகோதரி என குடும்பமாக கடமையாற்றுவது எமது தாதிய உத்தியோகத்திற்கு ஆரோக்கியமான விடயமாகாது.

குறித்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சமயத்தில் வைத்தியர்கள், தாதியர்களுக்கிடையே நல்லுறவானது சிதைக்கப்பட்டு நாளிற்கு நாள் வைத்தியர்கள், தாதியர்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டு நோயாளர் பராமரிப்பை சரிவர வழங்க முடியாததால் நோயாளர்கள் பாதிப்படைந்தனர்.

அத்துடன் வவுனியா தாதியர் கல்லூரிக்கு வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், விஷேட வைத்திய நிபுணர்கள் இவருடைய முரண்பாடான செயற்பாடுகள் மற்றும் தாதிய பணிப்புறக்கணிப்பு என்பவற்றால் கல்வி கற்பிக்க செல்லாது புறக்கணித்தனர்.

நோயாளர் பராமரிப்பில் வைத்தியர்கள், தாதியர்களின் நல்லுறவானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. குறித்த நபர் மீண்டும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் சமயத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் தொடருமென நாம் அச்சத்திலுள்ளோம்.

தற்சமயம் வைத்தியர், தாதியர்களிடையேயான உறவானது சீராக நன் நிலையில் காணப்படுகின்றது. இதன் மூலம் நோயாளர் பராமரிப்பானது திறன்பட அமைகின்றது.

எனவே இவரின் இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரச வைத்தியர்கள் சங்கத்தினரும் இவரின் இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு ஆதரவு வழங்கியுள்ளனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பணிகள் சீரான முறையில் தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில் இவரின் இடமாற்றத்தின் மூலம் அந்நிலை பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகவும், இதனை உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு இடமாற்றத்தினை இரத்துச் செய்ய முன்வரவேண்டும் எனவும் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.