யாழில் இருந்து சொகுசு பஸ்ஸில் கஞ்சா கடத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Yathu in அறிக்கை

கிளிநொச்சி - பளைப்பகுதியில் சொகுசு பஸ் ஒன்றில் 12 கிலோ கஞ்சா கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வகையில் இரவு வேளைகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கடந்த வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் இருந்து மொனராகலை நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஒன்றை கிளிநொச்சிப் பளை பகுதியில் வைத்து பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது 12 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், பஸ் சாரதியும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி குறித்த இருவரையும் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது பஸ்ஸின் சாரதியை வழக்கிலிருந்து விடுவித்ததுடன், இரண்டாவது சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.