சி.வி.விக்னேஸ்வரன் ஐயா துரோணாச்சாரியார்! அவரே முடித்து வைக்கட்டும்

Report Print Navoj in அறிக்கை

‘கற்தூணாய் நெருங்குவோமன்றி, காலமறிந்து செயற்படோம்’ என்றிருப்பது தமிழர் தம் தலைவிதியாக மாறிவிடக் கூடாது என்பதே எனது எண்ணமென இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தவறவிடாது தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது.

ஆனால், வடக்கு முதலமைச்சரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார். விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அர்ச்சுணன் இல்லையென்றாலும், ஐவரில் ஒருவன்,

இல்லையென்றால் ஏகலைவன். அவருக்கு அளிக்க வேண்டிய கண்ணியத்தை வழங்கி ‘உள்ளதையும், நல்லதையும்’ சொன்னேன், “விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய்” என்று நொந்தேன்.

அவர் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார். “எய்தற்கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செயல்” என்ற வள்ளுவம் போல், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தவறவிடாது தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றேன்.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ” என்று ஏங்குவதை விட என்ன செய்ய?

நாம் முடியுடை வேந்தர் பரம்பரை. “வடவேங்கடம் முதல், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகை” எப்படியோ சுருக்கி இன்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றோம்.

‘கற்தூணாய் நெருங்குவோமன்றி, காலமறிந்து செயற்படோம்’ என்றிருப்பது தமிழர் தம் தலைவிதியாக மாறிவிடக் கூடாது என்பது என் எண்ணம். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறது புறநாநூறு.

துரோணாச்சாரியார் விஸ்வமித்திரராக விஸ்வரூபம் எடுக்கின்றார். நான் கொக்கு அல்ல. எனினும் அவர் மீதான மதிப்பும், மரியாதையும் என்றும் உள்ளபடியே இருக்கும்.

இனிமேல் இது பற்றி நான் தொட மாட்டேன். தொடங்கியவரே முடிப்பவரும் ஆவார் என்ற மரபுப்படி ஐயா அவர்கள் முடித்து வைப்பதாயினும் சரி… அது அவர் திருவுளம் என்று கி.துரைராஜசிங்கம் மேலும் தெரிவித்தார்.

Latest Offers