தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக அறிக்கை - உங்களுடன் சில வார்த்தைகள்

Report Print Sumi in அறிக்கை

தேசியத்தலைவர் வளர்த்த தம்பிகளே நாங்கள். ஒருபோதும் தவறிழைக்க மாட்டோம். தவறு செய்யின் தண்டியுங்கள். இப்போது நடைபெறப் போகும் தேர்தலில் எம்மை வெற்றியடைய செய்யுங்கள் என தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ரீதியான அரசியல் வேலைகளை முன்னெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு வந்த பல போராளிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளால் உருவாகியுள்ளது. நாங்கள் யார் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை கட்டாயமாக தெளிவு படுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

அன்பானவர்களே... எம் தாயகம் இறுதி யுத்தம் என்ற பெயரில் சிங்கள பேரினவாத அரசினாலும் சர்வதேச சக்திகளினாலும் கருவறுக்கப்பட்ட போது இறுதி நாள்வரை எம் தேசத்துக்காகவும், எம் மக்களுக்காகவும் ஆயுதம் ஏந்தி களத்தினில் நின்றவர்கள் நாங்கள்.

வல்வை மண்ணில் உதித்த எம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இறுதிவரை போராடிய உங்களின் பிள்ளைகள் நாங்கள். எம் மக்களுக்காக களமாடி உடலில் விழுப்புண்களைத் தாங்கி வாழும் சாதாரண மனிதர்கள்.

எம் போராட்டத்தை நீங்கள் தான் தூண்களாகத் தாங்கினீர்கள். எம்மை உங்கள் பிள்ளைகளாக வளர்த்தீர்கள். அதனால் தான் நாங்கள் ஒரு பெரும் நிழல் அரசையே நடைமுறைப்படுத்தி இந்த உலகத்தையே ஆச்சரியப்படுத்தினோம். ஆனால் பதினெட்டாம் திகதி வைகாசி மாதம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட எம் ஆயுதப் போராட்டத்தின் பின் நாங்கள் செல்லாக் காசாக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டோம்.

இன்று அரசியல் தலைவர்கள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளால் நாம் துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறோம். குப்பி கடித்து சாகாதவன் ஒருவன் போராளி என்று சொல்ல தகுதியற்றவன் என்று கூட எம்மை சில அரசியல்வாதிகள் கூறினார்கள்.

நாம் உலக வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியாகி தோற்றுவிட்டோம். அதனால் அரசியல்வாதிகளும் சிங்கள பேரினவாதிகளின் அடிவருடிகளும் எம் மீது சுமத்தி வரும் பெரும் வரலாற்று துரோகத்தை இதுவரை நாங்கள் பொறுமையாகவே கையாண்டோம். ஏனெனில் எம் மக்கள் எம்மை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னான நாட்களில் எம்மை நாம் ஆளும் அரசியல் செயற்பாடுகளின் தேவை எம்மால் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்தது.

ஆனாலும் நீண்ட கால ஓட்டத்தில் உடனடியாக அரசியல் செயற்பாடுகளில் எம்மால் இயங்க முடியவில்லை. ஆனால் அரசியல் ரீதியான மாற்றம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து அன்று களமுனையில் களமாடிய உங்களின் பிள்ளைகள் இன்று அரசியல் களத்தில் தனித்து நிற்கிறோம்.

இதுவரையும் எத்தனையோ அரசியல்வாதிகளை நம்பி நீங்களும் எம் தாயக வாழ் மக்களும் நாங்களும் ஏமாந்து போய்விட்டோம். இனியும் எம் வாழ்க்கையில் ஏமாற்றம் என்பது வேண்டாமே.

நாங்கள் உங்களுக்காக உங்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள். இதை மனமார ஏற்றுக் கொள்ளுங்கள். இலங்கையின் அரசியல் களத்தில் தமிழீழ மக்கள் சார்பாக "தமிழ் விடுதலைப் புலிகள்" என்ற கட்சியாகிய எம்மை ஒரு தடவையாவது நம்புங்கள். நாங்கள் துரோகிகள் அல்ல இன்றும் உங்கள் பிள்ளைகள் என்பதை நாம் புரிய வைக்கிறோம்.

தற்போது நாம் முன்னெடுத்து வரும் அரசியல் செயற்பாடுகளுக்கும் தேர்தல் வேலைத்திட்டங்களுக்கும் நிதி ஒரு பெரும் தடையாகவே உள்ளது. அடிப்படை வாழ்வாதார வசதிகள் அற்றவர்களாகவே நாம் எம் மக்களுக்கான பணியினை ஆற்ற முன்வந்துள்ளோம்

நாங்கள் மக்களுக்காக வாழ்ந்த போராளிகள். எமக்கு ஆடம்பரம் வேண்டாம். குறைந்தது அரசியல் வேலைகளுக்கான அடிப்படை வசதிகளையாவது ஏற்படுத்தி தாருங்கள். கடந்து கொண்டிருக்கும் தூய்மையற்ற அரசியல் களத்தில் புதிய பாதை ஒன்றை நாம் உருவாக்கி உங்கள் நெஞ்சங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வளவு நம்பிக்கையானவர்களாக இருந்தார்களோ அதைப் போலவே நாமும் தூய அரசியல் வழியில் பயணிப்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

அன்பானவர்களே...

இந்த ஒரு தடவையாவது உங்கள் பெற்ற பிள்ளைகளாக, உங்கள் சொந்தச் சகோதரர்களாக எம்மை நினைத்து எமக்கு உதவுங்கள். இதில் வென்ற பின் நீங்கள் நினைப்பதைப் போல நாம் செயற்படவில்லை எனில் அப்போது எங்களை எப்படி என்றாலும் தூற்றுங்கள் தாராளமாக மன நிறைவோடு ஏற்றுக் கொள்கிறோம். தயவு செய்து அரசியல்வாதிகளும், இலங்கை புலனாய்வு அமைப்புக்களின் முகவர்களும் திட்டமிட்டு பரப்பும் பொய் பரப்புரைகளை நீங்கள் புரிந்து கொண்டு எம்மை எடை போடுங்கள்.

நாங்கள் உங்களின் பிள்ளைகள், உங்கள் மனம் நிறைந்த தேசியத்தலைவர் வளர்த்த தம்பிகள். ஒருபோதும் தவறிழைக்க மாட்டோம். தவறு செய்யின் அப்போது எம்மைத் தண்டியுங்கள்.

இப்போது நடைபெறப் போகும் தேர்தலில் எம்மை வெற்றியடைய செய்யவும் எமக்கான நல்ல அரசியல் தலைமையை நாம் உருவாக்கி அரசியல் வழி செயற்பாட்டு வெற்றிகளை பெறவும் எமக்காக இம்முறை உதவுவீர்கள் என்று நம்புகின்றோம்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்...