அரசியல் மூலோபாயங்களை வகுத்துக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு

Report Print Gokulan Gokulan in அறிக்கை

கனடாவில மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு பல்வேறு அரசியல் மூலோபாயங்களை வகுத்து கொண்டு நிறைவுகண்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தில் இடம்பெற்ற 8ஆவது நேரடி அரசவை அமர்வாக கடந்த வாரம் இடம்பெற்றள்ளது.

குறித்த அமர்வு மார்கம் பகுதியில் வன்னி வீதியில் அமையப் பெற்றுள்ள நகர மண்டபத்தில் ஜனவரி 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அரசவை உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொண்டதோடு, மேற்சபை உறுப்பினர்கள், மதியுரைக்குழு உறுப்பினர்கள் என பல்வேறு வளப்பிரதிநிதிகள் இந்த அமர்வில் நேரடியாக கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல், இராஜதந்திர வழிமுறையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடும் அமைப்புகள் தமது அமைப்பு வடிவத்தையும், செயற்பாடுகளையும் ஜனநாயக வழிமுறைக்கு உட்பட்டதாக ஒழுங்கமைத்துக் கொள்ளல் அடிப்படை அறம் சார்ந்தும்,அரசியல் மூலோபாயம் சார்ந்தும் அவசியமானதாகும் என தொடக்க நாள் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு அமைச்சுக்களினதும் மையங்களினதும் செயற்பாட்டறிக்கை, மேற்சபை உறுப்பினர்களின் கருத்துரைகள், பிரேரணைகள் என பல்வேறு விடயங்கள் அவையில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆயவறிஞர் மு.திருநாவுக்கரசு, பேராசிரியர் மணிவண்ணன், சட்டப்பேராசிரியர் செறி ஏய்கன், கனேடிய தமிழ் அரசியல் பிரமுகர் நீதன் சான் ஆகியோரது கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

சமகால நிலைமைகளுக்கு அமைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் மூலோபாயங்கள் குறித்து முடிவுகள் எட்டப்பட்டிருந்தன.

இதன்போது, கருத்து தெரிவித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,

எமது தாயகத்தின் விடுதலையை வென்றெடுப்பதிலும் கனடாவாழ் தமிழ் மக்கள் பெரும்பங்கு வகிக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

கனடாவில் கிடைக்கக்கூடிய அரசியல் வெளியை,கிடைக்கக் கூடிய அரசியல் வலைப்பின்னலை தாயகமக்களின் அரசியல் விடுதலைக்கு உறுதுணையாக்கும் வகையில் நாம் செயற்படவேண்டும் என கனேடிய தமிழ் சமூகம் நோக்கி கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

அமர்வு இடம்பெற்றிருந்த சமவேளை, தமிழர் திருநாளை கொண்டாடும் மரபுத்திங்கள் நிகழ்வும், பொதுக்கூட்டடும் இடம்பெற்றிருந்தன.

மூன்று அமர்வினை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கண்டுகொண்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு தமிழ் சமூக பிரதிநிதிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது புதிய நம்பிக்கை வந்துள்ளதோடு ,தமிழீழத்தினை வென்றடைவதற்கான திசையினை தெளிவாக முன்வைத்திருந்தாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers