வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாட்டிற்கு கண்டனம் வெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Report Print Thileepan Thileepan in அறிக்கை

வவுனியா - கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டு வரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா வடக்கில் கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில் நீண்ட காலமாக கனகராயன்குளம் காவல்துறையினர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியையும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் கையகப்படுத்தி தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தார்கள்.

2013ஆம் ஆண்டு பொலிஸாரின் சேவைக்கென பொதுமக்களின் மாயானமாக பயன்படுத்தப்பட்டு வந்த பெரியகுளம் காணி வழங்கப்பட்டது.

அதன் பின்பும் கனகராயன்குள காவல்துறையினர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் விட மறுத்து வந்தார்கள்.

குறித்த பிரச்சினை தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக பிரதேச மக்களால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுவந்தது.

ஒவ்வொரு வருட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் கனகராயன்குள காவல்துறையின் அதிகாரிகள் தாம் விடுவிப்பதாக கூறிவந்த போதிலும் அக்காணிகளை தம் வசமே தொடர்ச்சியாக வைத்திருந்து அக் காணிகளில் சில அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள்.

கனகராயன்குள காவல்துறையினரின் இச் செயற்பாட்டிற்கு பொதுமக்களால் கடும் விசனம் வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த வருட இறுதியில் புதிதாக மாற்றம் பெற்று வந்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சேமரத்தின விதான பத்திரன குறித்த காணிகளை கனகராயன்குள காவல்துறையினருக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றார்.

கனகராயன்குளத்தில் பொதுத் தேவைகளுக்கான கட்டங்கள் கட்டுவதற்கோ, வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கோ எந்த ஒரு பொதுக்காணியும் இல்லாத நிலையில் அரசஅதிபரின் நடவடிக்கை பலத்த சந்தேசகத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த காலத்தில் பல நடவடிக்கைகள் நெடுங்கேணிக் கிராமங்களை அண்மித்துள்ள பகுதிகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற அரச அதிகாரிகள் குறித்த இப்பிரச்சினையிலும் பாரமுகமாக இருப்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கிராம அபிவிருத்திக்கு சொந்தமானதும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியினையும் கனகராயன்குளப் பொலிஸாருக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தி கனகராயன்குளப் பொதுத் தேவைகளுக்கு அக்காணிகளை விடுவிக்குமாறு கோருவதுடன் தவறும் பட்சத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும், பொது அமைப்புக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றிணையும் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்பதனை சகல அரச அதிகாரிகளுக்கும், மாவட்ட அரசஅதிபரினதும் கவனத்திற் கொண்டுவருவதுடன் இச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.