மதுபான நிலையம் அமைப்பதை எதிர்த்து போராடும் பெண்கள் அமைப்பு

Report Print Theesan in அறிக்கை

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பனிக்க நீராவிப்பகுதியில் பிரதான ஏ9 வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியில் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இதற்கு மகளிர் கிராம அபிவிருத்தி சங்கம் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன் அப்பகுதியிலுள்ள கிராம மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையினை மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இது குறித்து பனிக்க நீராவிப்பகுதியிலுள்ள கிராம மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் முதல் பனிக்க நீராவிப்பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றில் மதுபான விற்பனை நிலையம் அமையவுள்ளதாக எமக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து எமது பகுதியில் குறித்த மதுபான நிலையத்தினை அமைப்பதற்கு மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் எமது எதிர்ப்பினை கடிதமாகத் தயாரித்து வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை, ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நாடாளுமனற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோருக்கு முகவரி இடப்பட்டு, எமது பகுதியிலுள்ள பொதுமக்களின் கையொப்பத்துடன் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அக்கடிதத்திற்கு இன்று வரையில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அதிகாரிகளால் மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து தற்போது எமது பகுதிக்கு பொறுப்பாகவுள்ள சுகாதாரப் பரிசோதகர்கள் பனிக்க நீராவிப்பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் சம்மதக் கடிதம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் அவ்வாறு ஒரு கடிதமும் எமது மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கத்துனூடாக வழங்கவில்லை. அக்கடிதம் எங்களுடைய அமைப்பினரின் இல்லை.

அக்கடிதம் திருட்டுத்தனமாகவும் அச்சம்மதக் கடிதத்துடன் வழங்கப்பட்டுள்ள கையொப்பங்கள் நாங்கள் ஏற்கனவே பனிக்கநீராவிப்பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழங்கப்பட்ட கடிதங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

எமது பகுதியில் மதுபான விற்பனை நிலையத்தினை அமைப்பதில் சிலர் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.

எமது பகுதியில் மதுபான விற்பனை நிலையத்தை அமைப்பதற்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகவும், கிணறு வெட்டித்தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பன்றிக்கெய்தகுளம் பகுதிக்கு அருகிலுள்ள பனிக்க நீராவிப்பகுதியில் 75ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூலிவேலைகளை மேற்கொண்டு வருபவர்கள்.

பாடசாலை மாணவர்கள் கல்வி கற்றுவரும் இப்பகுதியில் மதுபான நிலையம் அமைப்பதை நாங்கள் கடுமையாகவே எதிர்க்கின்றோம்.

தற்போது எமது பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றினை அகற்றுவதற்கு நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

குறித்த கள்ளுத்தவறணையை அகற்றுவதற்கு பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.

எனினும் அங்கு கள்ளு விற்பனை குறைவடையும்போது பக்கற்றில் சட்டவிரோத கசிப்புக்கள் இப்பகுதிக்கு எடுத்துவரப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமையும்பட்சத்தில் ஆண்களுடன் சமனாக பெண்களும் மதுபோதைக்கு அடிமையாக வேண்டிய நிலை உருவாகும்.

நாங்கள் எவரும் இப்பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தவதற்கு எமது கிராமத்திலுள்ளவர்களின் கையெழுத்து பெறப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து மதுபான நிலையம் அமைக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தவதற்கு முயன்றுவருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்